பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1433 

   (வி - ம்.) 'அலர்ந்த காமவல்லியை ஒத்தார்' எனச் சுட்டுப் பெயராக்கும் நச்சினார்க்கினியர், இனி, பசந்த தம்மை நோக்கினார் கண் சுடும் படி நின்றார். வல்லிபூத்துப் பொலிவழிந்த தன்மையை ஒத்தார் என்றும் உரைப்ப என்றுங் கூறுவார்.

   இத்துணையும், மணநிலை வகையிற் பிறந்த பெண்பாலாரையும் பரத்தையரையும் கூறினார். இது, மக்கள் வகையான் காமப் பொருட் பகுதி பற்றி முன்னோர் கூறிய குறிப்பு வகையாள் வந்த செந்துறைப் பாடாண்பகுதியாம்.

( 162 )
2540 உகிர்வினை செய்து பஞ்சி
  யொள்ளொளி யரத்த மூட்டி
யகில்கம ழங்கை சேப்ப
  வரிவைய ரலங்க றாங்கி
வகிர்படு மழைக்கண் சின்னீர்
  மாக்கய லெதிர்ந்த வேபோன்
முகில்கிழி மின்னி னோக்கி
  முரிந்திடை குழைந்து நின்றார்.

   (இ - ள்.) அரிவையர் - மகளிர்; உகிர் வினை செய்து - உகிரைச் சீவி; பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி - பஞ்சியினாலே சிறந்த ஒளியையுடைய செந்நிறக் குழம்பை ஊட்டி; அகில் கமழ் அங்கை சேப்ப அலங்கல் தாங்கி - அகில்கமழும் அங்கை சிவக்கும்படி மாலையை ஏந்தி; வகிர்படு மழைக்கண் சின்னீர் மாக்கயல் எதிர்ந்தவே போல் - மாவடு போலும் மழைக்கண் சிறிது நீரைக் கயல் எதிர்ந்தன போல; முகில் கிழி மின்னின் நோக்கி - முகிலைக் கிழிக்கின்ற மின்னெனப் பார்த்து; இடை முரிந்து குழைந்து நின்றார் - இடை ஒசிந்து கலங்கி நின்றார்.

   (வி - ம்.) இது முதலாகக் கற்புடை மகளிரைக் கூறுகின்றார். இடை குழைந்து நின்றாரெனவே மனக் குழைவின்றி நின்றாரென்பது பெறப்பட்டது.

( 163 )
2541 முனித்தலைக் கண்ணி நெற்றிச்
  சிறார்முலை முழாலிற் பில்கிப்
புனிற்றுப்பால் பிலிற்றித் தேமா
  வடுவிறுத் தாங்குப் பாய
நுனிந்துக்கண் ணரக்கி நோக்கா
  தொசிந்துநின் றார்க ளன்றே
கனிப்பொறை மலிந்து நின்ற
  கற்பகப் பூங்கொம் பொத்தார்