பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1448 

   (இ - ள்.) தனக்கு இளையானை - தனக்குத் தம்பியாகிய நந்தட்டனை; இள உடையான் என்று - இளவரசன் என்று; இனக்களி யானை மன்னர் ஏத்த - திரளாகிய களிறுகளையுடைய மன்னர் புகழ்; நாட்டி - நிலைநிறுத்தி; தான் தனக்கு என்று கூறி - இரப்பறியாத அவன் தனக்குச் செய்ய வேண்டும் என்று இரந்து கூறி; சினக்கிளி யானை மன்னர் மகளிரைச் சேர்த்தி - சீற்றமுடைய மதகளிறுகளையுடைய மன்னரின் மகளிரை மணம் புரிவித்து; நம்பன் மனக்கு இனிது உறைக என்று - நந்தட்டன் மனமகிழ்ந்து வாழ்க என வாழ்த்தி; வளம்கெழு நாடும் ஈந்தான் வளம் பொருந்திய நாடுகளையும் நல்கினான்.

   (வி - ம்.) நச்சினார்க்கினியர், மன்னர் மகளிரை மணம் புணர்த்தியதையும் நாடுகளை நல்கியதையும் நபுல விபுலர்க்குச் செய்தான் என்பர். செய்யுளிற் சிறிதும் அதற்கு இடமில்லை. 'மன்னர் மகளிரை' எனப் பன்மையாற் கூறியுள்ளாரே எனின், ஒருவன் பல பெண்களை மணத்தல் அக்கால இயல்பென்க. போரில் விபுலன் பட்டான் என்றும் நம்பன் என்றது நபுலனை யென்றும் அவனுக்கு மகளிரைச் சேர்த்தினான் என்றும் நச்சினார்க்கினியர்க்கு முன்னிருந்தோர் கூறுவதாகத் தெரிகிறது. இதனை, 'அன்றி, விபுலன் பட்டான் என்று கூறுவார் நம்பனென்றதனை, நபுலனுக்காக்கி அவனுக்கு மகளிரைச் சேர்த்தி என்ப' என்று கூறுவதாற் காண்க.

( 191 )
2569 ஆழ்கடல் வையத் தில்லா
  வருநிதி யரசு நல்ல
சூழ்மணி யாழி செம்பொற்
  சூட்டொடு கண்ணி காதற்
றோழர்கட் கருளித் தொல்லை
  யுழந்தவர் தம்மைத் தோன்ற
வாழ்கென நிதியு நாடு
  மன்னவன் கொடுப்பித் தானே.

   (இ - ள்.) மன்னவன் காதல் தோழர்கட்கு - சீவக மன்னன் தன் அன்புடைத் தோழர்களுக்கு; ஆழ்கடல் வையத்து இல்லா அருநிதி அரசும் - ஆழ்ந்த கடல் சூழ்ந்த உலகில் பிறர்க்கு இல்லாத அரிய செல்வமாகிய அரசையும்; நல்ல சூழ்மணி ஆழி - நல்ல மணியிழைத்த ஏனாதி மோதிரத்தையும்; செம்பொன் சூட்டொடு கண்ணி - செம்பொன்னாற் செய்த பட்டத்தையும் கண்ணியையும்; அருளி - கொடுத்து; தொல்லை உழந்தவர் தம்மை - முதலில் தனக்காகத் துன்பம் உற்றவர்களை; தோன்ற வாழ்க என - விளங்க வாழ்க என்று; நிதியும் நாடும் கொடுப்பித்தான் - செல்வமும் நாடும் அமைச்சரைக் கொண்டு கொடுப்பித்தான்.