பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1455 

2582 பெருநாட் டருங்கலங்கள்
  சுமந்துபேரு மிடம்பெறாஅ
தொருநாட் டரசுணங்க
  வுரவோன்கொற்ற முயர்ந்ததே.

   (இ - ள்.) செரு நாடு சஞ்சுடர் வேல் - போரினைத் தேடும் செவ்வொளி தவழும் வேலையும; செம்பொன் கனைகழல் கால் - பொன்னாலான ஒலிக்குங் கழலணிந்த காலையும், திருநாடு தேன் பைந்தார்ச் செல்வன் - திருமகள் நாடும் தேன் துளிக்கும் பைந்தாரையும் உடைய சீவகனது; செவ்வி பெறாது ஒழிந்து - சமயம் பெறாமையாற் காட்சி ஒழிந்து; பெருநாட்டு அருங்கலங்கள் சுமந்து - தம் பெரிய நாட்டின் அரிய கலன்களைச் சுமந்தவாறு; பேரும் இடம் பெறாது - அசையும் இடங் கிட்டாமல்; ஒரு நாட்டு அரசு உணங்க - ஒரு நாட்டிற்கு வேண்டும் அரசர்கள் வருந்தி நிற்கும்படி; உரவோன் கொற்றம் உயர்ந்தது - சீவகன் வெற்றி மேம்பட்டது.

   (வி - ம்.) நாட்டு : நிலை யெனினும் ஆம்.

   செரு போர். செருநாடுதற்குக் காரணமான வேல் என்க. திரு : திருமகள். வெற்றித்திரு வென்க. உணங்க வருந்த. உரவோன் - சீவகன். கொற்றம் - வெற்றி; அரசுரிமையுமாம்.

( 205 )

வேறு

2583 வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச்
சிலையவர் குரம்பை யங்கண் மானினஞ்சென்று சேப்ப
நிலைதிரிந் தூழி நீங்கி யுத்தர குருவு மாகிக்
கொலைகடிந் திவற வின்றிக் கோத்தொழி னடத்து மன்றே.

   (இ - ள்.) வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாய - வலையவரின் வாயிலிலே கிளர்ந்து வாள் போல வாளை துள்ள; சிலையவர் குரம்பை அங்கண் மானினம் சென்று சேப்ப - வேடர் குடிசையிலே மானினம் சென்று தங்க; கொலை கடிந்து - கொலை நீக்கி; நிலை திரிந்து ஊழி உத்தர குருவும் ஆகி - உலகம் தன் நிலை திரிந்து இவ்வூழியிலே வேறுபட்டு உத்தர குருவும் ஆகி, இவறல் இன்றி - பேராசையும் இல்லாமல்; கோத்தொழில் நடத்தும் - அரசியலைச் சீவகன் நடத்துவானானான்.

   (வி - ம்.) வாளை முன்றிலிற் பாயினும் வலையர் பற்றாராய், மானினம் தம் குரம்பையிலே தங்கினும் வேடர் கொல்லாராய்க் கொலை கடிந்தான். அதனாலே இவ்வூழியின் நிலை திரிந்தது.