|
(வி - ம்.) 'வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற' (தொல். புறத்திணை, 13) என்று உழிஞையிலும், 'மாணார்ச்சுட்டிய வாள்மங்கலமும்' (தொல். புறத்திணை, 36) என்று பாடாண்டிணையிலும் கூறிய வாளினை வாகைத்திணையிற் கூறாது, 'பெரும்பகை தாங்கும் வேலினாலும்' (தொல். புறத். 21) என்று வேலிற்கே வாகை கூறியது, காவல் தொழில்பூண்ட மாயோன் ஐம்படையும் போலாது, அழித்தற் றொழிலோர்க்கே உரித்தாய், முக்கட் கடவுளும் முருகனும் கூற்றும் ஏந்தி வெற்றிபெறுதற்குச் சிறந்த தென்பதுபற்றிப் புறத்திணையியலுட் கூறினமையால், ஈண்டும் வேலினை வியந்து மண்ணுநீராட்டின வெற்றியைக் கண்டோர் புகழ்தலின், 'புகழ்வேல'் என்றார். இது கட்டியங்காரன் பட்டபின் பகையரசரை வென்றமை கூறிற்று.
|
|
(இ - ள்.) விண்பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து - விண்ணிலே முகிலைப் பிளந்து, இருசுடரையும் விலக்கி ; விசும்பு ஏந்தி - வானினும் மேலாய்; மண்பால் திலகமாய் - நிலவுலகிற் கோயில்கட்குத் திலகமாய்; வான்பூத்தாங்கு மணி மல்கி - வான் மீனைப் பூத்தாற்போல மணிகள் மல்குதலாலே ; பண்பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி - பண்ணிற் பொருந்திய பாட்டை வண்டும் தேனும் பாடுகின்ற பொழிலாகிய அசோகிற்குள்ளே; எண்பால் இகந்து உயர்ந்தார்க்கு - காதி முதலிய எட்டுக் கன்மங்களின் நீங்கி எட்டுக் குணங்களால் உயர்ந்த அருகற்கு; இசைந்த கோயில் இயன்றது - பொருந்திய கோயில், அரசன் ஏவலாலே சமைந்தது.
|