பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1502 

   (இ - ள்.) தூமலர் மாலை வாள் ஆ - தூய மலர்மாலை;  வாளாக; சுரும்பு எழப் புடைத்தும் - வண்டுகள் எழ ஓச்சியும்; தேன் சோர் தாமரைச் சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் - தேன் வழியும் தாமரை மலர்போன்ற கைகளாலே சதங்கை மாலையைச் சுழல் படையாக வீழ்த்தும்;  கண்ணிகள் காமரு கணையம் ஆக ஒழுக விட்டும் - கண்ணிகளை விருப்பூட்டும் கணையமாக முன்னே மிதக்கவிட்டும்; தொங்கல் தோமரமாகச் சிதறுபு மயங்கினார் - பெரிய மாலைகளைத் தண்டாகச் சிதறியும் தம்மிற் போர் செயக்கலந்தார்.

   (வி - ம்.) வாளா - வாட்படையாக. சுரும்பு - வண்டு. தேன்சோர் தாமரை என்றது கைகளை. கணையமாகக் காமரு கண்ணிகள் என மாறுக. தோமரம் - ஒரு படைக்கலன். தொங்கல் - ஒருவகை மாலை. மயங்கினார் - கலந்தார் .

( 58 )
2657 அரக்குநீர்ச் சிவிறி யேந்தி
  யாயிரந் தாரை செல்லப்
பரப்பினாள் பாவை தத்தை
  பைந்தொடி மகளி ரெல்லாந்
தரிக்கிலா ராகித் தாழ்ந்து
  தடமுகிற் குளிக்கு மின்போற்
செருக்கிய நெடுங்கண் சேப்பச்
  சீதநீர் மூழ்கி னாரே.

   (இ - ள்.) அரக்கு நீர்ச் சிவிறி ஏந்தி - இங்குலிகம் கலந்த நீரைச் சிவிறியிலே ஏந்தி; ஆயிரம் தாரை செல்ல - ஆயிரம் தரையாகச் செல்லும்படி; பாவை தத்தை பரப்பினாள் - பாவையாகிய தத்தை (மகளிர்மேற்) செலுத்தினாள்; பைந்தொடி மகளிர் எல்லாம் தரிக்கிலர் ஆகி - பசிய வளையல் அணிந்த மங்கையர் எல்லோரும் அத் தாரைகளைப் பொறாராய்; தாழ்ந்து - ஆற்றல் குறைந்து; செருக்கிய நெடுங்கண் சேப்ப - களித்த நீண்ட விழிகள் சிவக்க; தட முகில் குளிக்கும் மின்போல் - பெரிய முகிலிடையே மறையும் மின்னுக் கொடிகள் போல்; சீதம் நீர் மூழ்கினார் - குளிர்ந்த பொய்கையின் நீரிலே முழுகினர்.

   (வி - ம்.) 'தடமுகில்' என்பதில் உள்ள 'தடம்' என்னும் சொல்லை எடுத்துத், 'தடத்துச் சீதநீர்' என இயைப்பர் நச்சினார்க்கினியர். நீரில் மூழ்குவதை, 'வெண்முகில் மறையும் மின்போல' என்றுவமை காட்டுவர்.

( 59 )
2658 தானக மாட மேறித்
  தையலார் ததும்பப் பாய்வார்
வானகத் திழியுந் தோகை
  மடமயிற் குழாங்க ளொத்தார்