பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1538 

   (இ - ள்.) பிடிமருள் நடையினார் தம் பெருங்கவின் குழையப் புல்லி - பிடி மயங்கும் நடையை உடைய அம் மகளிரின் பேரழகு வாட்டமுற்றதால் அவரைத் தழுவி; தொடை மலர்க் கண்ணி சூட்டி - தொடுத்த மலர்க் கண்ணியைச் சூட்டி; சுரும்பு உண மலர்ந்த மாலை - வண்டுகள் பருக மலர்ந்த மாலையை; உடை மது ஒழுகச்சூட்டி - அதனுடையதேன் ஒழுக அணிந்து; உருவத்தார் குழைய வைகி - (தான் அணிந்த) அழகிய மாலை குழையும்படி வைகியதால்; மகளிர் கடிமலர் ஒத்தார் - அவ்வரியவையர் கடிமலரைப் போன்றனர்; காவலன் களிவண்டு ஒத்தான் - அரசன் களிப்பையுடைய வண்டைப் போன்றான்.

   (வி - ம்.) வைகி - வைக : எச்சத்திரிபு. கடி - ஈண்டு நீக்கம். கடியென்னும் உரிச்சொல் பெயரெச்சமாய் நின்று வினைத்தொகையாயிற்று. கடிந்த மலரெனவே மேல் கூட்டமின்மை கூறினாராயிற்று. களி வண்டெனவே மேல் தேனுக்கும் விருப்பமின்றி நுகர்ச்சியமைந்த வண்டாயிற்று. என்றது; மேல் துறவுக்குக் காரணங் கூறுகின்றாராதலின் ஈண்டுத் தேனை உமிழ்ந்து அமிர்தத்தை நுகருமென்பது தோன்றக் கூறினார். 'தேன் வாயுமிழ்ந்த அமிர்துண்டவன் போன்று செல்வன்' (சீவக. 29) என்று பதிகத்துள் அவ்வாறே கூறலின்.

( 121 )
2720 இழைந்தவர் நலத்தை யெய்தி
  யினந்திரி யேறு போலக்
குழைந்ததார் நெகிழ்ந்த தானைக்
  கொற்றவன் பெயர்ந்து போகி
வழிந்துதேன் வார்ந்து சோரும்
  வருக்கையி னீழல் சோ்ந்தான்
விழைந்தவக் கடுக னாங்கோர்
  மந்தியை விளித்த தன்றே.

   (இ - ள்.) இழைந்தவர் நலத்தை எய்தி - (தன்னைக்) கூடிய அம் மகளிரின் நலத்தை நுகர்ந்தபின் ; குழைந்த தார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் - குழைந்த தாரையும் சோர்ந்த உடையையும் உடைய வேந்தன்; இனம் திரி ஏறு போல - தன் இனத்தினின்றும் பிரிந்து செல்லும் விடைபோல; பெயர்ந்து போகி - மீண்டு போய்; தேன் வழிந்து வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான் - தேன் பழத்தினின்றும் வடிந்து வீழும் பலாவின் நீழலை அடைந்தான்; ஆங்கு விழைந்த அக்கடுவன் ஓர் மந்தியை விளித்தது - ஆங்கே களவொழுக்கத்தை விரும்பிய கடுவன் ஒரு மந்தியை அழைத்தது.

   (வி - ம்.) இழைந்தவர் : வினையாலணையும் பெயர். ஈண்டுக் காந்தருவதத்தை முதலிய மனைவிமார் என்க. இனத்திற்றிரிதல் - கூட்டத்தினின்றும் பிரிந்து தனித்துப்போதல் என்க. கொற்றவன் :