பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1550 

   (வி - ம்.) மிக்க தவத்தைச் செய்து அதனால் நால்வகை வீரத்தையும் உடையவராவர். அவை, 'கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே' (தொல் : மெய்ப். 9) என்பதனான் உணர்க.

( 140 )

வேறு

2739 கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்
தடிமலர் சூடி யவருலகில் யாரே
யடிமலர் சூடி யவருலக மேத்த
வடிமலர் தூவ வருகின்றா ரன்றே.

   (இ - ள்.) கடிமலர்ப் பிண்டிக் கடவுள் - எக்காலமும் புதியதாகிய மலரினையுடைய அசோகின் அடியிலே எழுந்தருளிய இறைவனின்; கமலத்து அடிமலர் சூடியவர் உலகில் யார்? - தாமரையிலே நடந்த அடியாகிய மலரைக் சூடியவர் இவ்வுலகில் யாவராய் நுகர்வர்? (என வினவின்); அடிமலர் சூடியவர் அன்றே - அடிமலரை அணிந்தவர்களல்லரோ; உலகம் ஏத்த - உலகம் போற்ற; வடிமலர் தூவ வருகின்றார் - அரசர் வடித்த மலரைத் தூவ ஈண்டு வருகின்றவர்?

   (வி - ம்.) கடிமலர் - ஈண்டு எக்காலமும் புதிய மலர் என்பதுபட நின்றது, யாவர் என்றது எத்தகையோராய் என்றவாறு. உலகம் : ஆகுபெயர். வடிமலர்தூவ வருகின்றவர் என்க.

( 141 )
2740 முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையா னாளும் பணிகின்றார் யாரே
பத்திமையா னாளும் பணிவார் பகட்டெருத்தி
னித்தில வெண்குடைக்கீழ் நீங்காதா ரன்றே.

   (இ - ள்.) முத்தணிந்த முக்குடைக் கீழ் மூர்த்தி திருவடியை - முத்துக்களால் அணி செய்யப்பெற்ற முக்குடையின் கீழ் எழுந்தருளிய இறைவன் திருவடியை; பத்திமையால் நாளும் பணிகின்றார் யார்? - அன்புடைமையால் எப்போதும் வணங்குவோர் யாவராய் இன்புறுவர்? (எனின்); பத்திமையால் நாளும் பணிவார் அன்றே - அவ்வாறு அன்புடன் எப்போதும் வணங்குவோர் அல்லரோ; பகட்டெருத்தின் நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா தார் - யானையின் பிடரிலே முத்தணிந்த வெண்குடையின் கீழே இருக்கும் இருப்பு நீங்காமல் வருகின்றார்?

   (வி - ம்.) முக்குடைக்கீழ் மூர்த்தி - அருகக்கடவுள். பத்திமை - அன்பு. பகட்டெருத்து - யானையின் பிடரி. எருத்தத்தின் மேலே குடைக்கீழே யிருக்கின்ற இருப்பு நீங்காமல் வருகின்றவர் என்க.

( 142 )