பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1565 

   (இ - ள்.) உடும்பு இனம் வேட்டஞ் செய்தார் - உடும்பின் குழுவை வேட்டையாடினவர்; துடிக்குரல் குரல பேழ்வாய்த் தொடர்ப்பிணி உறுத்த செந்நாய் - துடியின் குரல் போலும் குரலவாகிய, பெரிய வாயையுடைய, சங்கிலியினாற் பிணிக்கப்பட்ட செந்நாயைக் கொண்டுவந்து; மடுத்திட - கடிக்கவிட; வைர ஊசி வாள் எயிறு அழுந்தக் கௌவி - (அவை) வைர ஊசிகளைப் போலும் கொடிய பற்கள் அழுந்துமாறு பற்றி; புடைத்திட - உதறிப் போகடுதலாலே; ஆற்றார் அலறி - ஆற்றாராய் அலறி; பொன்றினும் பொன்றல் செல்லார் - (இவ்வாறே) உடல் கெட்டாலும், உயிர் கெடுதல் இலராய்; துன்பம் உழப்ப - துன்பத்திலே உழல்வர்.

   (வி - ம்.) மாது, ஓ  : அசைகள், இவர்கள் துன்புறுதற்காக அழிந்த உடம்பு மேலும் வடிவு கூடும் என்றுணர்க.

( 169 )
2768 வாளைமீன் றடிக டின்றார்
  வருகென வுருக வெந்த
பாளத்தைக் கொடிற்றி னேந்திப்
  பகுத்துவாய் புகுத்த லாற்றா
ருளைக்கொண் டோடு கின்றா
  ருள்ளடி யூசி பாயத்
தாளொற்றித் தப்பி வீழ்ந்தார்
  தறிவலை மானிற் பட்டார்.

   (இ - ள்.) வாளை மீன் தடிகள் தின்றார் - வாளை மீனின் ஊனைத் தின்றவரை; வருக என வாருங்கள் என்று அழைத்து; வாய் பகுத்து - அவர்கள் வாயைத் திறந்து; உருக வெந்த பாளத்தைக் கொடிற்றின் ஏந்திப் புகுத்தல் ஆற்றார் - உருகும்படி காய்ந்த செப்புப் பாளத்தைக் குறட்டாலே எடுத்துப் புகுத்தலைப் பொறாராய்; ஊளைக்கொண்டு ஓடுகின்றார் - கூவிக்கொண்டு ஓடுகின்றவர்கள்; உள் அடி ஊசி பாய - தம் உள்ளங்காலில் ஊசி பாய்வதனாலே; தாள் ஒற்றித் தப்பி வீழ்ந்தார் - கால் நிலத்தே ஒட்டிக்கொண்டு செயலற்று வீழ்ந்தவர்களாய்; தறிவலை மானின் பட்டார் - முளையிற் கட்டிய வலையிற் பட்ட மான் போல அகப்பட்டிடுவர்.

   (வி - ம்.) தப்பி ஓடாமல் நிலத்திலே ஊசியை நட்டு வைத்திருப்பர். அவ்வூசிக்கு 'அடி ஒட்டி' என்றும் பெயர். 'தாள் ஒற்றித் தப்பி, வீழ்ந்தார்' என்னுந் தொடரிலுள்ள. 'தப்பி வீழ்ந்தார்' என்பதை 'வாளை மீன் தடிகள் தின்றார்' என்பதன்முன் சேர்த்து, 'நல்லறத்தைத் தப்பிப்புலாலுண்ண விரும்பினாராய்' எனப் பொருள்கூறிப் பிணைப்பர் நச்சினார்க்கினியர். 'தப்பி வீழ்வார் ' என்றும் பாடம்.

( 170 )