பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1581 

விட்டு நடப்பனபோற் சிந்தும் - ஆமை கைவீசி நடக்குமாறு போலுஞ் சிந்தரும்; சீ விளைந்து அட்டும் உயவு நோய் - சீபெருகிவருத்தும் நோயையும்; அல்லாப் பிற நோயும் - இவையல்லாத வேறு பிற நோய்களையும்; பட்டார் உறு துன்பம் - உற்றவரும் படுந் துன்பத்தை; பன்னிச் சொலலாமோ? - விளக்கிக் கூற வியலுமோ?

   (வி - ம்.) கொட்டுப்பிடி - களைக்கொட்டின் பிடி, இது கூனருக்குவமை. குறளும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கது; செய்யுள் விகாரம். சிந்தர் - குறளரின் சிறிது நெடியராய் மாந்தர்க்குரிய முழு வளர்ச்சியும் எய்தாதவர். அட்டும் - ஒழுகும். உயவு. செய்யும் நோய். பிறநோய் என்றது மனத்தால் உண்டாகும் துன்பங்களை. பன்னிச் செல்லுதல் - வகுத்துக் கூறுதல். ஓ : எதிர்மறை.

( 200 )

வேறு

2799 வேட்டன பெறாமை துன்பம்
  விழைநரைப் பிரித றுன்ப
மோட்டெழி லிளமை நீங்க
  மூப்புவந் தடைத றுன்ப
மேட்டெழுத் தறித லின்றி
  யௌ்ளற்பா டுள்ளிட் டெல்லாஞ்
சூட்டணிந் திலங்கும் வேலோய்
  துன்பமே மாந்தர்க் கென்றான்.

   (இ - ள்.) சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் - மாலை அணிந்து விளங்கும் வேலனே!; மாந்தர்க்கு - மக்களுக்கு; வேட்டன பெறாமை துன்பம் - விரும்பியவற்றைப் பெறாமை துன்பமாம்; விழைநரைப் பிரிதல் துன்பம் - விரும்பியவரைப் பிரிதல் துன்பம்; மோடு எழில் இளமை நீங்க - பெருமையுடைய இளமை விலகி; மூப்பு வந்து அடைதல் துன்பம் - முதுமை வந்து சேர்தல் துன்பம்; ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம் - ஏட்டிலிருக்கும் எழுத்தை அறிய முடியாமையால் இகழப்படுதல் உள்ளிட்டுயாவும்; மாந்தர்க்குத் துன்பமே என்றான் - மக்களுக்குத் துன்பமேயாம் என்றான்.

   (வி - ம்.) வேட்டன - விரும்பப்பட்ட பொருள்கள். விழைநர் - விரும்புவோர், மோடு - பெருமை; ஈண்டுச் சிறப்பின்மேனின்றது. எழில் - அழகு; எழுச்சியுமாம். ஏட்டெழுத்தறிதல் இன்றி என்றது கல்லாமை என்பதுபட நின்றது. எள்ளற்பாடு - இகழப்படுதல்.

( 201 )