பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1582 

13. தேவகதித் துன்பம்

2800 திருவிற்போற் குலாய தேந்தார்த்
  தேவர்தந் தன்மை செப்பிற்
கருவத்துச் சென்று தோன்றார்
  கானிலந் தோய்தல் செல்லா
ருருவமே லெழுத லாகா
  வொளியுமிழ்ந் திலங்கு மேனி
பருதியி னியன்ற தொக்கும்
  பன்மலர்க் கண்ணி வாடா.

   (இ - ள்.) திருவில்போல் குலாய தேன் தார்த் தேவர்தம் தன்மை செப்பின் - வான வில்லென விளங்கும் தேன் பொருந்திய மாலையணிந்த வானவரின் தன்மையை விளம்பின்; கருவத்துச் சென்று தோன்றார் - கருவிலே போய்ப் பிறவார்; கால் நிலம் தோய்தல் செல்லார் - கால் நிலத்திலே தோய்தலைப் பொருந்தார்; உருவமேல் - அவருருவைக் கூறின்; எழுதல் ஆகா - எழுதவியலாதன; ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி - அவர்களுடைய ஒளியைத் தோற்றி விளங்கும் நிறம்; பருதியின் இயன்றது ஒக்கும் - ஞாயிற்றினாலே அமைந்தது போன்றதாம்; பல்மலர்க் கண்ணி வாடா - அவர் அணிந்த பல மலர்க் கண்ணிகளும் வாடமாட்டா.

   (வி - ம்.) திருவில் - வானவில்; இது தாருக்குவமை. கருவத்து என்புழி அத்து, சாரியை. எழுதலாகாவாகும் என்க. பருதி - ஞாயிறு.

   தேவர் கருவிற்பிறவார், கானிலந்தோயப்பெறார், அவர் உருவம் எழுதவியலாத சிறப்புடையன. உடம்பு ஒளிமிக்கன; அவர் அணிந்த மாலைகள் பாடமாட்டா என்பதாம்.

( 202 )
2801 அங்கையு மடியு நோக்கிற்
  றாமரை யலர்ந்த தொக்கும்
பங்கய மனைய செங்கண்
  பகுவொளிப் பவழஞ் செவ்வாய்
செங்கதிர் முறுவன் முத்தின்
  றெளிநகை திகழுஞ் செய்யாள்
வெங்கடை மழைக்க ணோக்கி
  வெய்துறத் திரண்ட வன்றே.

   (இ - ள்.) அங்கையுங் அடியும் நோக்கின் தாமரை அலர்ந்தது ஒக்கும் - (அவர்களுடைய தேவியருக்கு) அழகிய கையை