பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1636 

   சாந்தம் - சந்தனம். கொம்பனார் கண்கள் நீர்நிறைந்த குவளைமலர் போன்றன என்றவாறு. எனவே, அஞ்சி அழுதனர் என்றவாறு.

( 296 )
2895 பொன்வரை நிலாக்கதிர் பொழிந்து போர்த்தபோற்
றென்வரைச் சந்தனந் திளைக்கு மார்பினான்
மின்னிவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
யின்னுரை கொடான்கொடிக் கோயி லெய்தினான்.

   (இ - ள்.) பொன்வரை நிலாக்கதிர் பொழிந்து போர்த்த போல் - மேருமலைமிசை நிலவு தன் கதிரைச் சொரிந்து அதனை மறைத்தாற்போல; தென்வரைச் சந்தனம் திளைக்கும் மார்பினான்- பொதியமலையின் சந்தனம் கிடந்து பயன்கொண்ட மார்பினான்; மின் இவர் நுசுப்பினார் மெலிய - மின் போன்ற இடையினார் வருந்த; இன் உரை கொடான் மெல்லக் கொடிக்கோயில் எய்தினான் - இனிய மொழி கூறாமல், மெல்லக் கொடியுடைய கோயிலை அடைந்தான்.

   (வி - ம்.) கொடான் : முற்றெச்சம்.

   பொன்வரை - மேருமலை. தென்வரை - பொதியமலை, நுசுப்பினார் - ஈண்டுக் காந்தருவதத்தை முதலியோர். கொடிக்கோயில் - ஈண்டு அரண்மனை. தென்றமிழ்நாட்டுப் பொதியமலைச் சந்தனம் மிக்க நறுமணமுடையது; சிறந்தது.

( 297 )
2896 அஞ்சுரை பொழிந்தபா லன்ன மென்மயிர்ப்
பஞ்சிமெல் லணையின்மேற் பரவை யல்குலார்
மஞ்சிவர் மதிமுக மழுங்க வைகினார்
நஞ்சுயிர்த் தணிநலங் கரிந்து நையவே.

   (இ - ள்.) பரவை அல்குலார் - பரவிய அல்குலையுடைய அம் மங்கையர்; நஞ்சு உயிர்த்து - நஞ்சுபோல வெய்துயிர்த்து; அணிநலம் கரிந்து நைய - தம் அணியும் அழகும் கரிந்து வாட; மஞ்சு இவர் மதிமுகம் மழுங்க - முகிலிற் பொருந்திய திங்களனைய முகம் ஒளி குன்ற; அம் சுரை பொழிந்த பால் அன்ன- அழகிய மடி சொரிந்த பால்போன்ற ; மென்மயிர்ப் பஞ்சி மெல் அணையின்மேல் வைகினார் - மெல்லிய தூவிகளும் பஞ்சும் பொருந்திய மெல்லிய அணையின்மேல் அமர்ந்தனர்.

   (வி - ம்.) மடிசொரிந்த பாலெனவே நுரையுண்மை பெற்றாம். இதனைப்; பஞ்சுக்கு மட்டும் கொள்க. கிடக்கை நுரை போன்ற தென்பதனை “எண்ணெய், நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை“ எனப் புறநானூற்றின்கண் மோசிகீரனார் பாடிய சுவைமிக்கபாட்டான் உணர்க.

( 298 )