பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1655 

உயிரைக் காத்து நிற்கும், உண்ணும் சோற்றைக் கொடுத்தல்; செம்பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும் - செவ்விய பொன் நிறைந்த துறக்கத்திற்குச் செல்லும் ஏணி ஆகும்; முற்று உயிர் ஓம்பித் தீ தேன் ஊனொடு துறப்பின் - முற்றும் உயிர்களைக் காத்து இனிய தேனையும் ஊனையும் துறந்தால்; யார்க்கும் மற்று உரை இல்லை - எவருக்கும் வேறு அறம் கூறவேண்டுவதில்லை; மண்ணும் விண்ணும் நும் அடிய - மண்ணும் விண்ணும் நும் அடியில் உள்ளன.

   (வி - ம்.) அன்று, ஏ : அசைகள். மேற்கூறிய அறங்களை அரசியர் முன்னரே உடையர் ஆதலின் மண்ணும் விண்ணும் அவர்களின் அடியன என்றான்.

( 329 )

வேறு

2928 மாலைப் பந்தும் மாலையு மேந்தி மதுவார்பூஞ்
சோலைம் மஞ்ஞைச் சூழ்வளை யார்தோள் விளையாடி
ஞாலங் காக்கும் மன்னவ ராவார் நறவுண்ணாச்
சீலங் காக்குஞ் சிற்றுப காரம் முடையாரே.

   (இ - ள்.) மாலைப் பந்தும் மாலையும் ஏந்தி - மலர்மாலையாற் சமைத்த பந்தையும் மாலையையும் கையுறையாகக் கொடுத்து; மதுஆர் பூஞ்சோலை மஞ்ஞைசூழ் வளையார்தோள் விளையாடி - தேன் நிறைந்த மலர்க்காவிலே மயில்போல் உலவும் வளையணிந்த மகளிரின் தோளிலே விளையாடி; ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் - உலகங்காக்கும் வேந்தராக ஈண்டிருப்போர்; நறவு உண்ணாச் சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே - (முன்னர்க்) கள்ளுண்ணாமையாகிய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த சிறிய உதவியை உடையவரே.

   (வி - ம்.) மாலைப் பந்து - மாலையாலியற்றிய பூப்பந்து. சோலைம் மஞ்ஞை : மகரம் வண்ணத்தால் விரிந்தது. ஞாலம் - உலகம். நறவுண்ணாமையாகிய ஒழுக்கம் என்க.

( 330 )
2929 மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளி
னூசித் துன்ன மூசிய வாடை யுடையாகப்
பேசிப் பாவாய் பிச்சையெ னக்கை யகலேந்திக்
கூசிக் கூசி நிற்பார் கொடுத்துண் டறியாதார்.

   (இ - ள்.) மாசின சின்னத்துணி - அழுக்கினையுடையவாகிய சிறிய துணிகளை; முள்ளின் ஊசித் துன்னம் மூசிய ஆடை - முள்ளாகிய ஊசியாலே தைத்த தையல் மொய்த்த ஆடையை; மாசித் திங்கள் உடையாக - குளிர்மிக்க மாசித் திங்களின் உடையாகக் கொண்டு; பாவாய்! பிச்சை எனப் பேசி - பாவையே !