பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1656 

பிச்சையிடு எனக் கூறி; கை அகல் ஏந்தி - கையில் ஓட்டை ஏந்தி; கூசிக் கூசி நிற்பர் - (செல்வர் மனையிற் செல்லக்) கூசிக் கூசி நிற்பவர்கள்; கொடுத்து உண்டு அறியாதார் - முற்பிறப்பிலே வறியர்க்குக் கொடுத்துண்டறியாதவர்களே.

   (வி - ம்.) குளிரின் மிகுதி கருதி மாசித்திங்கள் என்றார். மாசினவாகிய சின்னத்துணி என்க. முள்ளின் ஊசி - முள்ளாலியற்றிக் கொண்ட ஊசி எனினுமாம். துன்னம் - தையல், பிச்சையெனப்பேசி என மாறுக.

( 331 )

வேறு

2930 காட்டகத் தொருமகன் றுரக்கு மாக்கலை
யோட்டுடைத் தாமெனி னுய்யு நங்களை
யாட்டியிட் டாருயி ரளைந்து கூற்றுவ
னீட்டிய விளைமதுப் போல வுண்ணுமே.

   (இ - ள்.) காட்டகத்து ஒரு மகன் துரக்கும் மாக்கலை - காட்டிலே ஓட்டவல்லான் ஓட்டும் கலைமான்; ஓட்டு உடைத்தாம் எனின் உய்யும் - ஓட்டம் வல்லதாயின் அவனைத் தப்பி ஓடிப் பிழைக்கும்; (ஆனால்); கூற்றுவன் நங்களை ஆட்டியிட்டு - காலன் நம்மை ஆட்டி; ஆர் உயிர் அளைந்து - சிறந்த உயிரை எடுத்து ; ஈட்டிய விளை மதுப்போல உண்ணும் - சேர்த்து வைத்து விளைந்த மதுவைப்போலத் தப்பாமற் பருகிவிடுவான்.

   (வி - ம்.) ஒருமகன் - ஒரு வேடன் என்பதுபட நின்றது. ஓடும் வன்மையுடையதாயிருப்பின் என்றவாறு. கூற்றுவன் நங்களை மதுப்போல அளைந்து உண்ணும் என்க.

( 332 )
2931 புள்ளுவர் கையினு முய்யும் புள்ளுள
கள்ளவிழ் கோதையீர் காண்மி னல்வினை
யொள்ளியா னொருமக னுரைத்த தென்னன்மின்
றெள்ளியீ ரறத்திறந் தெரிந்து கொண்மினே.

   (இ - ள்.) கள் அவிழ் கோதையீர்! தௌ்ளியீர்! - தேன்மலருங் கோதையீராகிய அறிவுடையீர்!; புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள - வேட்டுவர் கையிலகப்பட்டும் பிழைத்துப் போம் பறவைகளும் உள; நல்வினை காண்மின் - (ஆதலின்) நல்வினை செய்தலை அறிமின்; ஒள்ளியான் ஒருமகன் உரைத்தது என்னன்மின் - (இவ்வறம்) அறிவுடையான் ஒருமகன் (பயனின்றாக) உரைத்ததென்று கொள்ளன்மின்; அறத்திறம் தெரிந்து கொண்மின் - அறத்தின் திறத்தை (உலகியலால்) தெரிந்து கொண்மின்.