பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1687 

 

   (இ - ள்.) கொல்சின யானை பார்க்கும் கூர்உகிர்த் தறுகண் ஆளி - கொல்லுஞ் சினமுடைய யானையை எதிர்பார்க்குங் கூரிய நகமுடைய அஞ்சாத ஆளி; இல் எலி பார்த்து நோக்கி - வீட்டெலியை எதிர்பார்த்து நோக்கியவாறு; இறப்பின்கீழ் இருத்தல் உண்டே? - வீட்டுக் கூரையின் கீழ் ருத்தல் உள்தோ?; பல்வினை வெள்ளம் நீந்தி - இருவினையாகிய வெள்ளத்தைக் கடந்து; பகா இன்பம் பருகின் அல்லால் - கெடாத பேரின்பத்தை நுகர்ந்தாலன்றி; நல்வினை விளையுள் என்னும் - நல்வினையால் உண்டாகிய செல்வம் என்கிற; நஞ்சினுள் குளித்தல் உண்டே? - நஞ்சினைப் பருகி அதனுட் குளித்தல் இல்லை.

   (வி - ம்.) யானை வீடு பேற்றிற்கும், ஆளி அதனை எய்துந் தகுதியுடைய மக்கட்பிறப்பிறகும், இல்லெலி இவ் வுலகவின்பத்திற்கும், இறப்பு உலகிற்கும் உவமைகள் ஆதலுணர்க. விளையுள் - செல்வம்.

( 387 )
2986 ஆற்றிய மக்க ளென்னு
  மருந்தவ மிலார்க ளாகிற்
போற்றிய மணியும் பொன்னும்
  பின்செலா பொன்ன னீரே
வேற்றுவ ரென்று நில்லா
  விழுப்பொருள் பரவை ஞால
நோற்பவர்க் குரிய வாகு
  நோன்மின் நீரு மேன்றான்.

   (இ - ள்.) பொன்னனீர் - திருவனையீர்!; மக்கள் ஆற்றிய அருந்தவம் என்னும் இலார்கள் ஆகின் - மக்கள் தேடிய அரிய தவம் சிறிதேனும் உடையரல்லாராயின்; போற்றிய மணியும் பொன்னும் பின்செலா - (அவர்கள்) காப்பாற்றிய மணியும் பொன்னும் அவர்பின் செல்லா; விழுப்பொருள் வேற்றுவர் என்று நில்லா - (கிடைத்தற்குரிய) சிறந்த பொருள்கள் வேற்றுவர் என்று நினைத்து அவர்பாற் செல்லாமல் நில்லா; பரவை ஞாலம் நோற்பவர்க்கு உரிய ஆகும் - பரவிய உலகப் பொருள்கள் தவம் புரிவார்க்கு உரியவாகும்; நீரும் நோன்மின் என்றான் - (ஆகையால்) நீவிரும் தவம்புரிமின் என்றான்.

   (வி - ம்.) நோன்மினம் : அம் : அசை.