பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1719 

பொற்செப்புத் திரளும்; அறிவு அரிது உணர்வு நாணித் தலை பனித்து அஞ்சும் சாந்தம் - நேரே அறிய இயலாததாய் உணர்வு வெள்கித் தலையசைத் தஞ்சுகின்ற கலவைச் சந்தனத்தையுடைய; தெண்கடல் திரையின் நேர் செறி இரும்பவழச்செப்பு - தெளிந்த கடலலையினாலே வந்து கரையிலே செறிந்த பெரிய பவழச் செப்புகளும்,

   (வி - ம்.) இது முதல் மூன்று பாட்டுகள் ஒரு தொடர்.

   'அறிவரிதுணர்வு நாணித் தலைபனித்தஞ்சும்' என்பதை 'மெய்பொதிந்து உயர்ந்த கோமான்' என (3049) பின்வரும் மூன்றாஞ் செய்யுளின் அடியுடன் கூட்டுவர் நச்சினார்க்கினியர். சந்தனத்தின் சிறப்பை யுணர்த்துதற்குக் கூறினாரெனக் கொள்வதே பொருத்தம்; மூன்றாஞ் செய்யுளடியுடன் கூட்டல் நூலாசிரியர் கருத்தாகாது.

( 449 )
3048 1வந்துதேன் மயங்கி மூசு
  மலயச்செஞ் சாந்த மார்ந்த
சந்தனச் செப்புங் கங்கை
  தருமண லலகை யாற்றாச்
சுந்தரம் பெய்த யானைத்
  தூமருப் பியன்ற வெண்செப்
பந்தரத் தலர்ந்த பன்மீ
  னெனைத்துள வனைத்து மாதோ.

   (இ - ள்.) தேன் வந்து மயங்கி மூசும் மலயச் செஞ்சாந்தம் ஆர்ந்த சந்தனச் செப்பும் - வண்டுகள் வந்து கலந்து மொய்க்கும் பொதியச் செஞ்சந்தனம் நிறைந்த சந்தனச் செப்புகளும்; சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு இயன்ற - சிந்துரப் பொடி பெய்த யானையின் தூய மருப்பினால் இயற்றிய; கங்கை தருமணல் அலகை ஆற்றா வெண்செப்பு -கங்கையாற்றின் மணல் போல அளவில் அடங்காத வெண் செப்புகளும்; அந்தரத்து அலர்ந்த வெண்மீன் எனைத்து உள அனைத்தும் - வானில் விரிந்த வெள்ளிய விண்மீன்கள் எவ்வளவினவோ அவ்வளவினதாகியவைகளும்.

   (வி - ம்.) 1தேன்வந்து என மாறுக. மலயம் - பொதியமலை, கங்கை மணல் வெண்செப்பின் மிகுதிக்கு வேறுபட வந்த உவமம் என்க. சுந்தரம் - சிந்துரப் பொடி, எனைத்து - எவ்வளவு, மணிச்செப்புமுதல் வெண் செப்பீறாக உள்ள செப்புகள் அனைத்தும் பன்மீன் எனைத்துள அனைத்துள என்க. மணப்பொருள்கள் நிறைந்துள்ள சிமிழ்களாகிய செப்புகள் அளவில்லன என்பார், அளவில்லனவற்றை எடுத்துக்காட்டுவாய் விண்மீன்களாகிய உடுக்கூட்டங்களை உரைப்பாராயினர்.

( 450 )