பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1726 

   (வி - ம்.) மாதவன் என்றது சீவகசாமியை. சரிதம் - வரலாறு; முற்பிறப்பிற் செய்த தவம் முதலிய வரலாறு என்க. ஏதம் - குற்றம், இன்று - இன்றி, ஓகாராம் - சிறப்பு, கணம் - முனிவர் கூட்டம், தாமும் கேட்க வேண்டும் என்னும் காதலாலே கைதொழ என்றவாறு.

( 461 )
3060 பாட்டருங் கேவலப் பரவை மாக்கடற்
கூட்டருங் கொழுந்திரை முகந்து மாமுனி
மோட்டிரு மணிமுகின் முழங்கிப் பெய்தலி
னூட்டரு மறவமிர் துலக முண்டதே.

   (இ - ள்.) பாடு அருங்கேவலப் பரவை மாக்கடல் - புகழ்தற்கரிய கேவல ஞானம் என்னும் பரப்புடைய பெரிய கடலிலே; கூட்டுஅருங் கொழும் திரை - கூட்டத்தையுடைய பெறுதற்கரிய நல்ல திரையை; மாமுனி மோடு இருமணி முகில் முகந்து - பெருமுனியாகிய பெரிய கருமுகில் மொண்டு; முழங்கி ஊட்ட அரும் அற அமிர்து பெய்தலின் - முழங்கி ஊட்டற்கரிய அறமாகிய அமிர்தைப் பொழிதலின்; உலகம் உண்டது - அதனை உலகம் உண்டது.

   (வி - ம்.) எனவே, இந்த ஞானத்தாலே பல பிறப்பிற் செய்ததவங்களை உணர்ந்து கூறினார் என்றார். தவங்களைக் கூறவே அறமாயிற்று. இக்காரணங் கூறவே துறந்தவண்ணமுங் கூறினாராயிற்று. ஊட்டரும் - பிறரை அறிவித்தற்கரிய.

( 462 )
3061 சீவகன் றிருவின மாக யாமென
நாவகந் தழும்பநின் றேத்தி நன்றரோ
காவல னாதியாக் கணங்கள் கைதொழப்
பாவமில் சுதன்மராற் பாடப் பட்டதே.

   (இ - ள்.) சீவகன் திருவினம் யாம் ஆக என - சீவகன் பெற்ற இத்திருவினை யாமும் உடையேமாக வேண்டும் என்று; நாவகம் தழும்ப நின்று நன்று ஏத்தி - நாவினிடம் தழும்புண்டாக நின்று நன்றாகப் போற்றி; காவலன் ஆதியாக் கணங்கள் கைதொழ - சேணிகன் முதலாக முனிவர் குழுவினர் கைதொழும்படி; பாவம் இல் சுதன்மரால் பாடப்பட்டது - குற்றமில்லாத சுதன்மர் என்னும் கணதரராலே (சீவகன் வரலாறு) பாடப்பட்டது.

   (வி - ம்.) திருவினம் : தன்மைப் பன்மை. யாம் திருவினமாக என்க அரோ : அசை, காவலன் : சேணிகன், கணம் : முனிக்கூட்டம். சீவக சரிதம் பாடப்பட்டது என்க. பெறற்கரியபேறு பெற்ற பெரியோன் வரலாற்றினை உலகுணர்ந்துய்ய நூல்வடிவில் ஆக்கித்தருவதும், உரைப்பதும், கேட்பதும் உயரிய தவமும் அறமுமாம் என்பதுணர்தல் வேண்டும்.

( 463 )