பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1751 

   (வி - ம்.) மதியம் - சீவகசாமிக்குவமை. தீங்கதிர்- அவன்மொழி கட்குவமை, ஆம்பல்-தேவியர்க்குவமை. அறிவன்; இறைவன், துளங்குமுள்ளம் - தீவினையால் துளங்கும் நெஞ்சம்.

( 505 )
3104 ஆர்ந்தகுணச் செல்வனடித் தாமரைக ளேத்திச்
சோ்ந்துதவ வீரர்திசை சிலம்பத் துதியோதித்
தூர்ந்தவிரு டுணிக்குஞ்சுடர் தொழுதருளு கென்றார்
கூர்ந்தமிழ்த மாரியெனக் கொற்றவனுஞ் சொன்னான்.

   (இ - ள்.) ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்தி - நிறைந்த குணச் செல்வனின் அடிகளாகிய தாமரை மலர்களை வாழ்த்தி; தவவீரர் சேர்ந்து - தவம் புரிந்த வீரர் யாவருங்கூடி; திசை சிலம்பத் துதி ஓதித் தொழுது - திசையெங்கும் முழுங்க வாழ்த்துக் கூறித் தொழுது; தூர்ந்த இருள் துணிக்கும் கூடர் அருளுக என்றார் - நெடுங்காலமாய்ச் செறிந்த இருளை அறுக்கும் சுடரை எமக்குக் கூறியருள்க என்றனர்; கொற்றவனும் அமிழ்த மாரி எனக் கூர்ந்து சொன்னான். அரசனும் அமிழ்த மழைபோல ஆராய்ந்து கூறினான்.

   (வி - ம்.) சுடர்: பரமாகமம்.

   தொழுது சுடர் அருளுக என்றார் என மாறுக. அவன் சொன்னபடி மேற்கூறுகின்றார்.

( 506 )
3105 இன்பமற் றென்னும் பேரா
  னெழுந்தபுற் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கு நான்கு
   கதியெனுந் தொழுவிற் றோன்றி
நின்றபற் றார்வ நீக்கி
  நிருமலன் பாதஞ் சேரி
னன்புவிற் றுண்டு போகிச்
  சிவகதி யடைய லாமே.

   (இ - ள்.) இன்பம் என்னும் பேர் ஆன் - இன்பம் ஆகிய பெரிய பசு; நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி - நான்கு கதி என்கிற தொழுவிலே தோன்றி; எழுந்த புல் கற்றை தீற்றி-மனவெழுச்சி என்னும் புல்லாகிய கற்றையைத் தின்று; துன்பத்தைச் சுரக்கும் - துன்பமாகிய பாலைச் சுரக்கும்; நின்ற பற்று ஆர்வம் நீக்கி - அதனிடத்து நின்ற பற்றையும் ஆர்வத்தையும் நீக்கி ; நிருமலன் பாதம் சேரின் - தூயவன் திருவடிகளை அடைந்தால்; அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாம் - அன்பைக் கொடுத்து அத் திருவடியை நினைத்துச் சென்று வீட்டுலகை அடையலாம்.