பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1753 

இன்ப உருவினனாய்ப், பொன் உயிராய் ; பிறந்து உயர்ந்து போகும் - பிறந்து உயர்ந்து போவான்.

   (வி - ம்.) மன்னுயிர் - பிறவுயிர் வைகலும் - நாடோறும், இறைவன் - தலைவன், இன்பமூர்த்தி - இன்பமே வடிவமாயினோன். பொன்னுயிர் - அருகந்தாவத்தை என்பர் நச்சினார்க்கினியர்.

( 509 )
3108 நெருப்புயிர்க் காக்கிநோய் செய்யி னிச்சமும்
முருப்புயி ரிருவினை யுதைப்ப வீழ்ந்தபின்
புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொரிந்து சுட்டிட
விருப்புயி ராகிவெந் தெரியுள் வீழுமே.

   (இ - ள்.) உயிர்க்கு நெருப்பு ஆக்கி நோய் செய்யின் - உயிர்களுக்கு வெம்மையுண்டாக்கி நோய் செய்தால்; நிச்சமும் உருப்பு உயிர் இருவினை உதைப்ப - நாடோறும் வெப்பத்தை உயிர்க்கின்ற அப் பெரிய தீவினை தள்ளுவதால்; வீழ்ந்த பின் - நோயிடத்தே வீழ்ந்த பிறகு; புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொதிந்து சுட்டிட - அந்நோய் புரியாற் புரிமேற் கட்டி இறுகப் பொதிந்து சுட; இரும்பு உயிராகி வெந்து எரியுள் வீழும் - தீவினை தோய்ந்த உயிராய்ப் போய்வெந்து நரகத்துக்குள்ளே வீழும்.

   (வி - ம்.) உயிர்க்கு நெருப்பு ஆக்கி என மாறுக. நெருப்பு : ஆகுபெயர். உருப்பு - வெப்பம். உருப்பை உயிர்க்கின்ற இருவினை என்க. இரும்புயிர் - தீவினை தோய்ந்த வுயிர். எரி - நரகம்.

( 510 )
3109 மழைக்குர லுருமுவா வோத மாக்கடற்
பிழைத்ததோ ரருமணி பெற்ற தொக்குமாற்
குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொ ணல்லறந்
தழைத்தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே.

   (இ - ள்.) குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொள் நல்லறம் - தளிரையுடைய பிண்டி நீழலானின் குளிர்ந்த நல்லறத்தை; தழைத்தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்தது - தழைதலையுடைய சந்தனப் பொதும்பரிலே சார்ந்தது; உருமுக்குரல் மழை உவா ஓதம் மாக்கடல் - இடியாகிய குரலையுடைய மழை பெய்கின்ற நிறை உவா நாளிலே உள்ள குளிர்ந்த பெரிய கடலிலே; பிழைத்தது ஓர் அருமணி பெற்றது ஒக்கும் - தப்பியதான ஓர் அரிய மணியைப் பெற்றதைப்போலும்.

   (வி - ம்.) நிறை உவா நாளிற் கடல் கொந்தளிக்கும்.

   உருமுக் குரலையுடைய மழைபெய்கின்ற உவாநாளின்கண் கடலிலே என்றவாறு. உவாநாளிற் கடல் கொந்தளிக்குமாதலின் இங்ஙனம் கூறினார். இச் சந்தனப் பொதும்பரிலே பிண்டியானுடைய அறத்தைச் சார்ந்தது கடலிலே வீழ்ந்த மணியைப் பெற்றதொக்கும் என்க.

( 511 )