பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1765 

மெல்ல நிறைய உண்டவராய்; தம்மைத் தாம் மகிழ்ந்து உறைய - தம்மைத் தாமே மகிழ்ந்து வாழா நிற்க; இத்தலைச் செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம் - இவ்விடத்தே செம்மையுற்ற நந்தட்டனுக்கும் தோழர்கட்கும் பிறந்த செய்கை கூறுவோம்.

   (வி - ம்.) வெம்மை - வேண்டுதல். அம்மை - அமைதி.

   இத்தலை - இவ்விடத்தே. செம்மை மாதவர் என்றது, நந்தட்டனையும் தோழரையும். இஃது ஆசிரியர் கூற்று.

( 533 )

நந்தட்டன் தோழன்மார் நோற்றுயர்வு

3132 நாள்கண்கூடிய நகைவெண் டிங்கள்போற்
காளை நந்தனுந் தோழன் மார்களு
நாளு நாளினு நடுங்க நற்றவந்
தாளி னீட்டினார் தம்மைத் தாம்பெற்றார்.

   (இ - ள்.) காளை நந்தனும் தோழன்மார்களும் - காளையாகிய நந்தட்டனும் அவன் தோழர்களும்; நாள் கண் கூடிய நகைவெண் திங்கள் போல் - நாடோறும் தன்னிடத்தே கலைகள் வந்து கூடிய ஒளி பொருந்திய வெண்மதி போல; நாளும் நாளினும் - நாடோறும் நாடோறும்; நடுங்க - (கண்டார்) நடுங்க; தாளின் - தம் முயற்சியாலே; நற்றவம் ஈட்டினார் - நல்ல தவத்தை யீட்டினார்; தம்மைத் தாம் பெற்றார் - (ஈட்டி) ஐம்பொறியையும் தம் வசமாக்கினார்.

   (வி - ம்.) நாள் - நாள்தோறும். கண் - இடம். கலைகள் வந்து கூடிய என்க. நகை - ஒளி. காளைபோல்வான் ஆகிய நந்தட்டனும் என்க. கண்டோர் பனிப்ப என்க. தாள் - முயற்சி. தம்மைத்தாம் பெறலாவது - தாம் பொறியின் வயப்படாமல் அவற்றைத் தாம் வயப்படுத்துதல்.

( 534 )
3133 பாவ னைமா¦இப் பட்டினி யொடுந்
தீவினை கழுஉந் தீர்த்தன் வந்தியாப்
பூவுண் வண்டெனக் கொட்பிற் புண்ணியர்
நாவின் வேட்கையு நஞ்சி னஞ்சினார்.

   (இ - ள்.) புண்ணியர் - அத்தவத்தினர்; பட்டினியொடும் - பட்டினிகளுடன்; பாவனை மெரீஇ - சோடச பாவனைகளுடன் பொருந்தி; தீவினை கழுஉம் தீர்த்தன் வந்தியா - தீவினையை நீக்கும் இறைவனை வணங்கி; கொடபின் - (உயிரைக் காப்பாற்றித் தவஞ்செய்தற்குக் கருதிய மனக்) கொட்பினாலே; நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார் - நாவினாற் கொண்ட உணவையும் (பின்னர்) நஞ்சுபோல அஞ்சிக் கைவிட்டனர்.