பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1766 

   (வி - ம்.) வண்டொத்த வேட்கை யென்றது - வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளும் உணவை. வேட்கை : ஆகுபெயர்.

   சோடாசபாவனைகள் : தரிசன விசுத்தி, விநய சம்பந்நதை, சீலவ்ரதேஷ்ய நதீசாரம், அபீஷண ஞானோபயோகம், சம்வேகம், சக்தி தஸ்தியாகம், சக்தி தஸ்தபஸ், ஸாதுஸமாதி, வையாவிருத்தியம், அருகதபத்தி, ஆசாரிய பத்தி, பகுசுருத பத்தி, பிரவசன பத்தி, ஆவசியகா பரிஹாணி, மாக்கப் பிரபாவனை, பிரவசன வத்ஸலத்வம்.

( 535 )
3134 கருவிற் கட்டிய காலம் வந்தென
வுருவ வெண்பிறைக் கோட்டி னோங்கிய
வருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவருந்
திருவின் றோற்றம்போற் றேவ ராயினார்.

   (இ - ள்.) உருவ வெண்பிறைக் கோட்டின் ஓங்கிய அருவிக் குன்றின் மேல் - அழகிய வெண்பிறையைத் தன் உச்சியிலே கொள்ள உயர்ந்த அருவியை உடைய குன்றின்மேல்; ஐவரும் முடித்திட்டு - ஐவரும் ஏனைத் தவங்களையும் முடித்திட்டு; கருவில் கட்டிய காலம் வந்தென - கருவிலே இறத்தற்கு விதித்த காலம் வந்ததாக; திருவின் தோற்றம்போல் தேவர் ஆயினார் - திருமகள் தோன்றுமாறு போல வானவர் மெய்யை (விரைவிற்) பெற்றனர்.

   (வி - ம்.) தீவினை நீங்கி நல்வினை வந்தால் திருமகள் நினைவின்றித் தோன்றுமாறு போல இருவரும் இவ்வுடம்பைவிட்டுத் தேவர் யாக்கை கடிதிற்பெற்றார்.

( 536 )

வேறு

3135 அனங்கனைத் தவஞ்செய வழன்று கண்டவர்
மனங்களைக் கவர்ந்திடு மணிக்கண் வெம்முலைப்
பொனங்கொடி மயிலனார்ப் புல்ல மாப்பிடி
யினம்பயில் கடாக்களிற் றின்ப மெய்தினார்.

   (இ - ள்.) தவம்செய அனங்கனை அழன்று கண்டவர் - தாம் தவம்புரிதற்குக் காமனைச் சினந்து நோக்கியவர்; மனங்களைக் கவர்ந்திடும் - (தம்மைக் கண்டார்) மனங்களைக் கவரும்; மணிக் கண் வெம்முலைப் பொனங்கொடி மயிலனார் புல்ல - நீலமணி போலுங் கண்களையுடைய, விருப்பூட்டும் முலைகளையுடைய பொற்கொடியையும் மயிலையும் போன்றவர்கள் தழுவ; மாப்பிடியினம் பயில் கடாக்களிற்று இன்பம் எய்தினார் - பெரிய பிடித்திரளைத் தழுவின மதயானைகளைப்போல இன்பத்தை அடைந்தனர்.

   (வி - ம்.) காமனைத் தம்மைப் பெறுதற்குத் தவம்செய்யும்படி அழன்று தம்மைக் கண்டார் மனங்களைக் கவர்ந்திடும் என்றுமாம்.