பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 205 

போகம் ஈன்ற புண்ணியன் என்றது திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளை, அவன் உலகிற்குப் போகமளித்தலை, ”போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்” எனவும், 'இடப்பாக மாதராளோ டியைந்துயிர்க் கின்பம் என்றும் அடைப்பானாம்” எனவும் வரும் சிவஞானசித்தியாரானும் (சுபக். 70-74) உணர்க.

 

   கணை - திருமால். விரிசடைக் கடவுள் திரிபுரம் எரித்தகாலைத் திருமால் கணையாக விருந்தான் என்பது புராணம்.

( 333 )
363 அம்பொற் கொம்பி னாயிழை யைவர் நலனோம்ப
பைம்பொற் பூமிப் பல்கதிர் முத்தார் சகடம்முஞ்
செம்பொற் றேரும் வேழமு மூர்ந்து நிதிசிந்தி
நம்பன் செல்லு நாளினு நாளு நலமிக்கே.

   (இ - ள்.) அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்ப - அழகிய பொற்கொடி யனைய அணிகலன் அணிந்த ஐவகைச் செவிலியரும் எல்லா நலத்தையும் போற்றிக் காக்க; பைம் பொன் பூமி - புதிய பொன்னாலமைந்த நிலத்திலே; பல்கதிர் முத்து ஆர் சகடமும் - பல ஒளிவிடும் முத்துக்களால் ஆன வண்டியையும்; செம்பொன் தேரும் - செம்பொன்னாலான தேரினையும்; வேழமும் - பொன்னாற் செய்த யானையையும்; ஊர்ந்து - செலுத்தி; நிதி சிந்தி - பொன்னை நல்கி; நாள் நாளும்; நாடோறும்; நலம்மிக்கு - அழகு மிகுந்து; நம்பன் செல்லும் - சீவகன் வளர்வானானான்.

 

   (வி - ம்.) ஐவர் : பாராட்டுவாள், பாலூட்டுவாள், தாலாட்டுவாள், சொல் கற்பிப்பவள், கையில் ஏந்தி வளர்ப்பவள். குழவிப் பருவத்தும் கொடை யியல்பாகையால், 'நிதி சிந்தி' என்றார். நாளின் : இன்: சாரியை.

( 334 )
364 பல்பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனிவானத்
தெல்லார் கண்ணு மின்புற வூரு மதிபோன்றுங்
கொல்லுஞ் சிங்கக் குட்டியும் போன்றிவ் வுலகேத்தச்
செல்லும் மன்னோ சீவகன் றெய்வப் பகைவென்றே.

   (இ - ள்.) பல்பூம் பொய்கைத் தாமரை போன்றும் - பல மலர்கள் நிறைந்த பொய்கையிலே தாமரை மலர் போன்றும்; பனிவானத்து எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் போன்றும் - குளிர்ந்த வானிலே யாவர் கண்களுங் களிப்புற இயங்கும் திங்கள் போன்றும்; கொல்லும் சிங்கக்குட்டி போன்றும் - கொல்லும் சிங்கக் குருளை போன்றும்; இவ் வுலகு ஏத்த - இவ் வுலகம் புகழ ; தெய்வப்பகை வென்று - தெய்வங்களாற் குழந்தைகட்குண்டாகுந் தீங்கில்லாமல் ; சீவகன் செல்லும் - சீவகன் வளர்கின்றான்.