பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 239 

416 அடைது நாநிரை யடைந்த காலையே
குடையும் பிச்சமு மொழியக் கோன்படை
யுடையும் பின்னரே யொருவன் தேரினா
லுடைதுஞ் சுடுவிற்றே னுடைந்த வண்ணமே.

   (இ - ள்.) நாம் நிரை அடைதும் - நாம் பசுத்திரளைப் பற்றுவோம்; அடைந்த காலையே கோன்படை குடையும் பிச்சமும் ஒழிய உடையும் - பற்றிய பொழுதே மன்னன் படை (வந்து பொருது) குடையும் பிச்சமும் பொருத இடத்திலேயே கிடக்கத் தான் மட்டும் தோற்றோடும்; பின்னர் ஒருவன் தேரினால் சுடுவில் தேன் உடைந்த வண்ணம் உடைதும் - பிறகு ஒருவனுடைய தேராற் சுடுதலால் வண்டின் திரள் ஓடுதல்போல நாம் தோற்றோடுவோம்.

 

   (வி - ம்.) பிச்சம் - மயிற்பீலியாற் கட்டுவன. சுடுவின் - சுடுதலால். சுடு : முதனிலைத் தொழிற்பெயர். ['சுடுதலென வினைமேல் நின்ற வினைப் பெயரன்றி வினைமாத்திரை உணர்த்தி நின்று உருவு ஏற்றது' என்பர் நச்சினார்க்கினியர்.]

 

   அடைதும் : தன்மைப்பன்மை; உடைதும் என்பது மது. குன்றவர் தேன் கொள்ளுங்கால் கொள்ளியால் சுட்டு வண்டுகளை ஓட்டுவர் ஆதலின் அந்நிமித்திகன் தாங் கெட்டோடுதற்குத் தன் அநுபவத்தே கண்டதனையே” சுடுவின் தேன உடைந்தவண்ணம் உடைதும் என்றான்' என ஆசிரியர் அமைத்தநயம் இன்புறற் பாலது ”தேனினம் போலக் கெடுதும் எனவே தமக்குப் பாடின்மை கூறினான்” என நச்சினார்க்கினியர் கூறுவதும் நுணுக்கமானது. பாடு - சாவு.

( 8 )
417 என்று கூறலு மேழை வேட்டுவீ
ரொன்று தேரினா லொருவன் கூற்றமே
யென்று கூறினு மொருவ னென்செயு
மின்று கோடுநா மெழுகென் றேகினார்.

   (இ - ள்.) என்று கூறலும் - என்று அவன் கூறின அளவிலே; ஏழை வேட்டுவீர்! - ஏழை வேடர்களே!; ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே என்று கூறினும் - ஒற்றைத் தேருடைய ஒருவனைக் கூற்றுவனே யென உலகம் கூறினும்; ஒருவன் என் செயும்?- அவன் தனியே என்ன செய்ய முடியும்?; இன்று நாம் கோடும் எழுக என்று ஏகினார் - (ஆகலின்) நாம் இன்று பற்றி விடுவோம்; எழுக! என்று நிரை நிற்கும் இடத்திற்குச் சென்றனர்.

 

   (வி - ம்.) இஃது ஓர் மறவன் கூற்று. ஏழை வேட்டுவீர் என்றது அறிவிலிகளே என்றிகழ்ந்தவாறு. கோடும் - கொள்ளுவேம். கோடும் எழுகென எல்லோரும் ஏகினார் என்க.

( 9 )