பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 240 

418 வண்டு மூசறா நறவ மார்ந்தவர்
தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்கென
மண்டி னார்நிரை மணந்த காலையே.

   (இ - ள்.) அவர்வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்து - அவர்கள் வண்டு மொய்த்தல் நீங்காத மதுவினை நிறையப் பருகி; தொண்டகப்பறை துடியொடு ஆர்த்து எழ - ஏறுகோட் பறையும் துடியும் ஆரவாரத்துடன் ஒலிக்க; வெல்க என விண்டு தெய்வதம் தெப்பவதம் வணங்கி - வெற்றி கிடைப்பதாக என்று வேண்டிக் கூறிக் கொற்றவையை வணங்கி; நிரை மணந்த காலை மண்டினார்-பகத்திரள் வந்து கூடின அளவிலே முற்பட்டுச் சென்றனர்.

 

   (வி - ம்.) 'விண்டு - அரசனுடன் பகைத்து' என்றும், 'தெய்வதம்-முருகன்' என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். ஏறுகோட்பறை - ஆநிரை கொள்ளுதலைக் குறித்தடிக்கும் பறை. சிலப்பதிகாரத்திலேயே ஆநிரை கொள்ளும் வேடர் கொற்றவையை வழிபடுதல் வருதலாற் பாலைநில மக்களாகிய வேடர்கட்கு வணக்கம் பொருந்தாது.

 

   மூசு : விகுதிகெட்ட தொழிற்பெயர். நறவம் - கள், தொண்டகப் பறை - ஆகோட்பறை. விண்டு - வாயினால் வாழ்த்தி. தெய்வதம் - தெய்வம்.

( 10 )
419 பூத்த கோங்குபோற் பொன்சு மந்துளா
ராய்த்தி யர்நலக் காசெ றூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினான்
வாய்த்த வந்நிரை வள்ளு வன்சொனான்.

   (இ - ள்.) பூத்த கோங்குபோல் பொன் சுமந்து உளார் - மலர்ந்த கோங்குமரம் போலப் பொன்னாலான அணிகளைச் சுமந்தவராகிய; ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான் - ஆய்ச்சியரின் நலம் சேர்தற்கு ஆக்கள் உராயும் கட்டை போன்றவனும்; கோத்த நித்திலம் கோதை மார்பினான் - முத்துமாலையும் பூமாலையும் பொருந்திய மார்பினனும் ஆகிய நந்தகோனின்; வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொன்னான் - தப்பாத அந்த நிரையிலே இருந்த நிமித்திகன் கூறினான்.

 

   (வி - ம்.) வாய்த்த வள்ளுவன் என்க. ஆசெல் தூண் : 'ஆதீண்டு குற்றி' எனப்படும். நிமித்திகன் கூறியது மேலே வரும்.

 

   இதன்கண், அணிகலன் நிரம்ப அணிந்துள்ள ஆய்த்தியர்க்குப் பூத்த கோங்கினையும் நந்தகோன் போகவின்பமிக்க பொலிவுடையன் ஆதற்கு ஆசெல் தூணையும் உவமையாக எடுத்துக் கூறிய அழகு நனி பேரின்பம் நல்குவதாம். சொனான் - சொன்னான். நலக்கு - நலத்திற்கு : சாரியை யின்றி உருபு புணர்ந்தது.

( 11 )