பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 241 

420 பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலா
லௌ்ளன் மின்னிரை யின்று நீரென
வெள்ளி வள்ளியின் விளங்கு தோணலார்
முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார்.

   (இ - ள்.) பிள்ளை உள்புகுந்து அழித்தது ஆதலால் - காரியென்னும் பறவை ஆனிரையிலே புகுந்து அழிவுக் குறி காட்டியது, ஆகையால்; இன்று நீர் நிரை எள்ளன்மின் என - இன்று நீங்கள் ஆனிரை காவலை நன்கு போற்றுக என்று நிமித்திகன் சொல்ல; வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார் முள்கும் ஆயரும் - வெள்ளி வளையல் விளங்கும் தோளையுடைய புதுமண மகளிரைத் தழுவும் புதுமணவாளப் பிள்ளைகளும்; மொய்ம்பாடு ஏகினார் - ஆற்றலொடு சென்றனர்.

 

   (வி - ம்.) அழிவுக்குறி காரி உள்ளே புகுந்து எழுதல் என்பர். எள்ளன்மின் - இகழன்மின் ; எனவே நன்கு காக்க என்றான். ஆயரும் : உம் : இழிவு சிறப்பு. புதுமணப் பிள்ளைகள் போருக்குச் செல்லுதல் மரபன்று. எனவே, அவருட்பட எல்லா ஆயரும் ஆனிரை காவலை மேற்கொண்டனர் என்க.

 

   பிள்ளை - காரி என்னும் பறவை. எள்ளன்மின் - இகழாதே கொண்மின். வள்ளி - வளையல். முள்குதல் - தழுவுதல். புதுமணம் புணர்ந்த இளைஞர் என்பார் தோணலார்முள்கும் ஆயரும் என்றார்; உம்மை உயர்வு சிறப்பு.

( 12 )
421 காய மீனெனக் கலந்து கானிரை
மேய வெந்தொழில் வேட ரார்த்துடன்
பாய மாரிபோற் பகழி சிந்தினார்
ஆயர் மத்தெறி தயிரி னாயினார்.

   (இ - ள்.) காயம் மீன் எனக் கலந்து கான் நிரை மேய - வானமும் மீன்களும் எனக் காட்டிற் கலந்து ஆனிரை மேயும் போது; வெந்தொழில் வேடர் ஆர்த்து - கொடுந்தொழில் வேடர் ஆரவாரித்து; பாய மாரிபோல் பகழி உடன் சிந்தினார் - பரவிய மழைத்துளி போலக் கணைகளை உடனே சிதறினர்; ஆயர்மத்து எறி தயிரின் ஆயினார் - ஆற்றாத இடையர் மத்தாற் கடையப் பட்ட தயிர்போலச் சிதறினர்.

 

   (வி - ம்.) காயம் : ஆகாயம் என்பதன் முதற்குறை. இது காட்டிற் குவமை. மீன் - விண்மீன்; இஃது ஆன்களுக்கு உவமை. ஆயர் உடைந்து சிதறியதற்கு, மத்தெறி தயிர் உவமை.

( 13 )
422 குழலு நவியமு மொழியக் கோவலர்
கழலக் காடுபோய்க் கன்று தாம்பரிந்
துழலை பாய்ந்துலா முன்றிற் பள்ளியுண்
மழலைத் தீஞ்சொலார் மறுக வாய்விட்டார்.