பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 244 

427 புறவணி பூவிரி புன்புலம் போகி
நறவணி தாமரை நாட்டக நீந்திச்
சுறவணி சூழ்கிடங் காரெயின் மூதூ
ரிறையணிக் கேட்கவுய்த் திட்டனர் பூசல்

   (இ - ள்.) புறவு அணி பூவிரி புன்புலம் போகி - முல்லை நிலமாகிய அழகிய மலர் விரிந்த புன்னிலத்தைக் கடந்து; நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி - தேன் பொருந்திய தாமரை மலர் நிறைந்த மருத நிலத்தை அரிதிற் கடந்து; சுறவு அணி கிடந்குசூழ் எயில் மூதூர் - சுறாமீன் பொருந்திய அகழி சூழ்ந்த மதிலையுடைய மூதூரை அடைந்து ; இறை அணிக் கேட்கப் பூசல் உய்த்திட்டனர் - அரசனுக்கு அருகிலுள்ளோர் கேட்குமாறு இக்குழப்பத்தை வெளியிட்டனர்.

 

   (வி - ம்.) அருகிலுள்ளோர் ஈண்டு வாயிற் காவலரெனக் கொள்க. 'இட்டனர்' என்றதனால் இப் பழியை அரசன் தலையிலே போட்டனர் என்பதாயிற்று. உய்த்திட்டனர் - உய்த்தனர் எனினும் ஆம். 'மூதூர் 'எனவே இதுவரை இப் பூசலைக் கேட்டறியாத தென்பது பெறப்பட்டது. பூசல் மேல்வரும்.

 

   புறவு - முல்லைநிலம்; சிறுகாடுமாம். தாமரை நாட்டகம் என்றது மருத நிலத்தை.

( 19 )

வேறு

 
428 கொடுமர வெயின ரீண்டிக் கோட்டிமி லேறு சூழ்ந்த
படுமணி நிரையை வாரிப் பைந்துகி லருவி நெற்றி
நெடுமலை யத்தஞ் சென்றா ரென்றுநெய் பொதிந்த பித்தை
வடிமல ராயர் பூசல் வளநகர் பரப்பி னாரே.

   (இ - ள்.) கொடுமர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த படுமணி நிரையை வாரி - வில்லேந்திய வேடர் கூடிவந்து கொம்பினையும் இமிலையும் உடைய ஏறுகள் சூழ்ந்த ஒலிக்கும் மணியை உடைய ஆனிரையை வளைத்து; பைந்துகில் அருவி நெற்றி நெடுமலை அத்தம் சென்றார் என்று - புத்தாடைபோல அருவி வீழும் உச்சியை உடைய பெரிய மலையை நாடி அரிய காட்டுவழியிலே போயினர் என; நெய் பொதிந்த பித்தை வடிமலர் ஆயர் - நெய் பூசிய மயிரிலே தெரிந்தெடுத்த மலரை யணிந்த இடையர்; வளநகர் பூசல் பரப்பினர் - வளநகரெங்கும் இக் குழப்பத்தை அறிவித்தனர்.

 

   (வி - ம்.) 'பல்லாக் கொண்டாரொல்லா என்னும் - பூசல் கேட்டுக் கையது மாற்றி' (பன்னிரு படலம்) என்றும், 'நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய '(பு.வெ.23) என்றும் துறை கூறுதலின், கேட்டோரெல்லாம் சென்று மீட்பரெனக் கருதி நகர்க்குணர்த்தினர்.

( 20 )