பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 27 

மதிக்கோடு உழக்கீண்டு இழியும், (முழவின் நின்று அதிர்) தேன் (திரள் யாவையும்) - வெள்ளிய பிறைத்திங்களின் நுனி உழுதலால் இறால் கிழிந்து இழியும் முழவென நிலைபெற்று முழங்கும் தேன்கூட்டங்கள் எல்லாமும்; குழுவின்மாடத் துகில் கொடி போன்ற - கூட்டமான மாடங்களில் துகிற்கொடியை ஒத்தன.

 

   (வி - ம்.) முழவு போல அதிர்தல் இரண்டிற்கும் ஏற்றுக 'வெண்டுகில்' (பரி-10 - 80) என்றும், 'கோபத்தன்ன தோயாப் பூந்துகில்' (முருகு - 15) என்றும் கூறலின் துகில் வெண்மை செம்மை இரண்டிற்கும் பொது. தேனருவிக்குச் செந்துகில் உவமை. குழவி வெண்மதிக்கோடு உழுதலும் தேனருவி முழவென முழங்கி இழிதலும் உயர்வு நவிற்சி.

( 5 )
35 இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல்
விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை
நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலாற்
கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே.

   (இ - ள்.) (அவை) இலங்கு நீள்முடி இந்திரன் மார்பின் மேல் விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்று - அவ்வருவிகள் தாமே விழும்பொழுது விளங்கும் நீண்ட முடியையுடைய இந்திரனுடைய மார்பின்மேலே பிணைத்து வீழ்ந்த முத்துமாலையையும் போன்று; அவை நலம்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலால் - அவை நலந்தரும் பொன்னையும் அழகிய மணிகளையும் சிதறுவதால் ; கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்ற - (இந்திரனுடைய) அணிகலப் பெட்டியைக் கவிழ்த்துக் காட்டப்பெற்ற அணிகலன்களையும் ஒத்தன.

 

   (வி - ம்.) விலங்கி வீழ்தல் -பிணைத்திட்ட மாலைபோலே வீழ்தல் (விலங்கல் - குறுக்கிடல்) கவிழ்த்த : 1.தொழிற் பெயர். சிந்துதல் - உள் நிறைதலின் தெறித்தல்.

 

   இது நீரிற்கு உவமை கூறிற்று.

 

   முற்செய்யுளில் தேனருவி நீரருவி என இருவகை அருவிகள் கூறப்பட்டன. அவற்றில் நீரருவிக்குமட்டும் ஈண்டு உவமை கூறிற்று என்கிறார் நச்சினார்க்கினியர். இனி , முற்செய்யுளில் நீரருவியை மட்டுமே கொண்டு, குழவி வெண்மதிக்கோடு உழுவதால் தேன் இறால் கீண்டு, வண்டுகள் ஆரவாரிப்பது முழவென அதிர்கின்ற தென்றும் அத்தகைய மலை முடியினின்றும் இழியும் நீரருவித்திரள் யாவையும் மாடத்தின் துகிற் கொடிபோல் விளங்குகின்றன என்றும் கூறுவதே பொருத்தமாகக் காண்கிறது. தேன் - வண்டுகளில் ஒருவகை. அவ்வாறு கொள்வது ஆற்றொழுக்காகப் பொருள்படுவதையும் தேனருவி கொள்ள வேண்டின் கொண்டு கூட்டுப்பொருள் கோள் கொள்ள வேண்டி வருவதையுங் காண்க.

( 6 )

1. வினையாலணையும் பெயர் என்றலே பொருத்தமுடைத்து.