பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 30 

40 பழங்கொடெங் கிலையெனப் பரந்து பாய்புனல்
வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை
தழங்குரல் பம்பையிற் சாற்றி நாடெலா
முழங்குதீம் புனலக முரிய மொய்த்ததே.

   (இ - ள்.) முழங்கு தீம்புனல் அகம் முரிய - ஆரவாரிக்கும் இனிய புனலாலே உட்கரை முரிதலால் ; தழங்கு குரல் பம்பையின் நாடெலாம் சாற்றி - ஒலிக்கும் ஒலியையுடைய பறையினாலே நாடெங்கும் உள்ளார் அறிவித்து; பழம்கொள் தெங்கு இலையெனப் பாய்புனல் பரந்து வழங்க - காய்த்த தென்னை ஓலையென நெருங்கிப் பாய்புனல் பரவி வழங்குமாறு ; முன் இயற்றிய சுதை செய் வாய்த்தலை மொய்த்தது - நீர் வரவறிந்து முன்னர் இயற்றிய சுண்ணாம்பினாற் கட்டப்பட்ட வாயக்காலினிடத்துப் (படலிடக்) கூடினர்.

 

   (வி - ம்.) பழம்கொள் தெங்கு - காய்த்த தெங்கு. இலை நெருக்கத்திற்கு (உவமை) தெங்கோலை எனற்பாலது தெங்கிலை எனப்படுதல் மரபு வழுவமைதியாகக் கொள்க. இலையெனப் பாய்புனல் பரந்து வழங்கும்படி நீர் வரத்தறிந்து முன்னே படுத்த வாய்த்தலை. தழங்கு குரல் : (தழங்குரல் என ஆனது) விகாரம்.

( 11 )
41 வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத்
தலைத்தலை யவர்கதந் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க்
குலத்தலை மகளிர்தங் கற்பின் கோட்டக
நிலைப்படா நிறைந்தன பிறவு மென்பவே.

   (இ - ள்.) வெலற்கு அருங் குஞ்சரம் வேட்டம் பட்டு என - முன்பே வெல்வதற்கு அரிய களிறு பின்பு வேட்டையிலே அகப்பட்டால், அதனைக் குத்துக்கோற்காரர் குத்தி அதன் மதத்தை விலக்குமாறுபோல; தலைத்தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய் - வாய்க்கால்களின் இடந்தொறும் இடந்தொறும் நாட்டிலுள்ளார் படலிட்டு விரைவை அடக்க, அவை தணிந்து போதலால்; குலத்தலை மகளிர்தம் கற்பின் - நற்குடிப்பிறந்த மகளிருடைய கற்பைப்போல; கோட்டகம் பிறவும் நிலைப்படா நிறைந்தன - பயிருடைய நீர்நிலையும் ஏரி முதலியனவும் நிலை கொள்ளாமல் நிறைந்தன.

 

   (வி - ம்.) குஞ்சரத்திற்கு வாய்க்கால் உவமிக்கும் பொருள், கோட்டகம் - பயிருடைத்தான நீர் நிலை. பிற - ஏரி முதலாயின.

( 12 )
42 கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர்
செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையு
மெவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு
பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே.