பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 328 

   குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்' (மலைபடுகடாம். 21 - 3) 'துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி - எண்ணாள் திங்கள் வடிவிற்றாகி' (பொருந. - 10 -11) என்றார் பிறரும்.

( 67 )
560 அரக்கெறி குவளை வாட்க
  ணவ்வளைத் தோளி னாளைப்
பரப்பமை காதற் றாயர்
  பற்பல்காற் புல்லிக்கொண்டு
திருப்புறக் கொடுத்த செம்பொற்
  றாமரை போன்று கோயில்
புரிக்குழன் மடந்தை போகப்
  புலம்பொடு மடிந்த தன்றே

   (இ - ள்.) அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளைத் தோளினாளை - (உறவைப் பிரிதற்கு அழுது சிவத்தலின்) இங்குலிகம் ஊட்டின குவளை மலர் போன்று ஒளிருங் கண்களையும் அழகிய வளையணிந்த தோளையும் உடைய தத்தையை - பரப்பு அமை காதல் தாயர் பற்பல் கால் புல்லிக் கொண்டு - பரவிய அன்பையுடைய அன்னையர் பற்பல முறையாகத் தழுவிக்கொள்ள; திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று - திருமகளைப் போகவிட்ட சிவந்த பொற்றாமரை மலர் போல; புரிகுழல் மடந்தை போகக் கோயில் புலம்பொடு மடிந்தது - கட்டப்பட்ட குழலினாளாகிய தத்தை செல்வதால் அரண்மனை வருத்தத்துடன் சோர்ந்தது.

 

   (வி - ம்.) புல்லிக்கொண்டு - தழுவிக்கொள்ள : வினையெச்சத்திரிபு. 'தொடரல் இறுதி தம்முன் தாம்வரின், லகரம் றகர வொற்றாகலும் உரித்தே' (தொல்-உயிர் மயங். -12 ) என்பதனாற் 'பற்பல்கால்' என்று கொள்க.

 

   'ஒழியாது' (தொல் - தொகை - 15) என்பதனால், இரண்டாவது விரித்துத் தாரணியையும் அல்லாத தாயரையும் புல்லிக்கொண்டு போக என்றும் ஆம். இவ்வாறு விரிப்பின், 'கொண்டு' என்னும் எச்சத்தைக் 'கொள்ள' எனத் திரிக்க வேண்டா.

 

   தத்தை நீங்கிய அரண்மனை பொலிவிழந்தமைக்குத் தேவர் ”திருப்புறக்கொடுத்த செம்பொற்றாமரை போன்று” என உவமை எடுத்துக் கூறியது நினைந்து நினைந்தின்புறற் பாலதாம்.

( 68 )
561 காம்புபொன் செய்த பிச்சங்
  கதிர்மணி குடையொ டேந்தித்
தாம்பலர் கவரி வீசக்
  கிண்கிணி ததும்ப நாகப்