பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 330 

   (வி - ம்.) 'மின்னுக் கொடி' எனப் பொருட்பெயர்க்கும் உகரமும் வல்லெழுத்துப் பேறும் (தொல். புள்ளி மயங். 50) இலேசாற்கொள்க.

 

   புல்லி - புல்ல எனத் திரித்து; 'இறைஞ்சலும் அடுத்தனன் புல்ல. (அவள் சென்று) தோழியர் குழாத்துள் நிற்ப, ஆற்றுகிலாது சொன்னான்' என மாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

( 70 )
563 வலம்புரி யீன்ற முத்தம்
  மண்மிசை யவர்கட் கல்லால்
வலம்புரி பயத்தை எய்தா
  தனையரே மகளி ரென்ன
நலம்புரிந் தனைய காதற்
  றேவிதன் னவையை நீங்கக்
குலம்புரிந் தனைய குன்றிற்
  கதிபதி கூறி னானே.

   (இ - ள்.) வலம்புரி ஈன்ற முத்தம் மண்மிசையவர்கட்டு அல்லால் - வலம்புரிச் சங்கு தந்த முத்து நிலமிசை வாழ்வார்க்கேயன்றி; வலம்புரி பயத்தை எய்தாது - வலம்புரி அம்முத்தின் பயனை அடையாது; மகளிர் அனையரே என்ன - பெண்களும் தங்கள் தாயருக்கு அத்தன்மையரே என்று; நலம்புரிந்த அனைய காதல் தேவிதன் நவையை நீங்க - நன்மையே ஒரு வடிவு கொண்டாற் போன்ற காதலையுடைய தன் மனைவி தன் வருத்தத்தைவிட; குலம் புரிந்த அனைய குன்றிற்கு அதிபதி கூறினான் - நற்குலமே ஒரு வடிவு கொண்டாற் போன்ற வெள்ளிமலைத் தலைவன் கூறினான்.

 

   (வி - ம்.) இச் செய்யுளின்கண் தேவர்,

 
  ”சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை  
  நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்  
  தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.”  

   என வரும் பாலைக்கலிக் (9-15-17) கருத்தினைச் சிறிது மாற்றி அமைத்துக் கொண்டிருத் தலறிக.

( 71 )
564 இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை
பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார்
மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத்
தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சோ்ந்தாள்.

   (இ - ள்.) இன்சுவை யாழொடு - இனிய சுவை தரும் யாழுடன்; அன்னம் மழலை இளங்கிளி மஞ்ஞை - அன்னமும் இளமை பொருந்திய மழலையுடைய கிளியும் மயிலும்; பொன்