பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 369 

   (இ - ள்.) செய்ய தாமரைமேல் திருவே கொலோ - செந்தாமரை மலரின்மேல் உள்ள திருமகளோ?; வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ - கொடிய பார்வையினையுடைய வித்தியாதர மகளேயோ?; மையில் வானவர்தம் மகளே கொல் - குற்றம் அற்ற வானவரின் மகளேயோ?; என்று ஐயம் உற்று - என்று ஐயம் கொண்டு; அலர்தார் மன்னர் கூறினார் - மலர்மாலை வேந்தர்கள் கூறினர்.

 

   (வி - ம்.) 636 முதல் இதுவரை உள்ளவை வேந்தர் தத்தையைக் கண்டு மயங்கிக் கூறியவை. கொல் : ஐயவிடைச்சொல் ஓ : அசை : வினாவுமாம்.

( 147 )
640 வீணை வென்றிவள் வெம்முலைப் பூந்தட
மாணை தோய்வதல் லாற்பிறன் வெளவுமேற்
கோணைப் போரிற் குளிக்குவ மன்றெனின்
மாண நற்றவஞ் செய்குவ மென்மரும்,

   (இ - ள்.) வீணை வென்று - யாழினால் வென்று; இவள் வெம்முலைப் பூந்தடம் தோய்வது அல்லால் - இவள் விருப்பமூட்டும் முலைகளாகிய அழகிய தடாகத்திலே படிதல், அல்லது; பிறன் வெளவுமேல் - மற்றவன் கைப்பற்றுவானெனில்; ஆணை - ஆணையாக; கோணைப் போரில் குளிக்குவம் - மாறுபட்ட போரிலே குளிப்போம்; அன்று எனின் - அல்லாவிட்டால்; மாண நல்தவம் செய்குவம் என்மரும் - இவளைப்பெற்று மாட்சிமையுறுதற்குத் தவத்தைச் செய்வோம் என்பாரும்.

 

   (வி - ம்.) ஆணை - வஞ்சினம். இது முதல் மூன்று பாட்டுகள் குளகம்.

 

   பிறன் வெளவுமேல் என்பதற்கு, பிறன் ஒருவன் யாழ்வென்றன்று தன் வலிமையினாலே இவளைக் கைப்பற்றுவா னாயின் என்பது பின்னர்ப் போரிற்குளிக்குவம் என்றதற்குப் பொருந்துவதாம்.

 

   இதனால் பெரும்பாலும் வித்தைகல்லாத வேந்தர் இவளைத் தாம் யாழ் வென்று கொள்ளவியலாது என்று தம்முட் கருதிக்கொண்டு மேலும் இவளை யாரும் வென்று கொள்ளவும் முடியாது எனவே ஆற்றலாலே கைப்பற்றவே முயல்வர்; அங்ஙனம் வந்தவிடத்து நாமே எல்லோரையும் வென்று இவளைப் பெறுதல் கூடும் எனத் தம்முள் ஒரு முடிவு செய்து கொள்கின்றனர் என்பதனை ஆசிரியர் மிக நுண்ணிதின் விளக்குகின்றார். இஃதோர் மனவியல்பு

( 148 )
641 குலிகச் செப்பன கொம்மை வரிமுலை
நலியு மெம்மையென் பார்நல்ல கண்களால்
வலிய வாங்கியெய் தாளெம்மை வாழ்கலே
மெலிய வாலி விடுக்குமற் றென்மரும்,