பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 377 

வேறு

 
652 வேயே திரண்மென்றோள் வில்லை கொடும்புருவம்
வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனி
நோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தா
ரேயே யிவளொருத்தி பேடியோ வென்றா
ரெரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வேன்றார்.

   (இ - ள்.) திரள் மென்தோள் வேயே! - திரண்ட மெல்லிய தோள் மூங்கிலே!; கொடும் புருவம் வில்லே! - வளைந்த புருவம் வில்லே!; வாய்வளர் பவளமே! - வாய் வளரும் பவளமே!; மாமேனி மாந்தளிரே! - மாமை நிறமுடைய மேனி மாந்தளிரே!; (எனினும், இவட்கு முலை கண்டிலேம்) முலை சுமப்பது நோயே? - (இவளுக்கு) முலை சுமத்தல் நோயோ?; என்றார்க்கு - என்று ஐயமுற்று வினவியவர்க்கு; அருகிருந்தார் - அருகிலிருந்தோர் (சிந்தனை செய்து) ஏ! ஏ!! இவள் ஒருத்தி பேடியோ? என்றார் - என்னே! என்னே!! இவள் ஒருத்தி பேடியோ என்று ஐயமுற்றார்; எரிமணிப் பூண் மேகலையாள் பேடியோ? என்றார் - (அது கேட்டுச் சிலர்) ஒளிரும் மணிப்பூண் அணிந்த, மேகலையினாள் ஆகிய தத்தையுடன் வந்த பேடியோ? என்றனர்.

 

   (வி - ம்.) ஏஏ : இசை நிறையுமாம்.

( 160 )
653 பலிகொண்டு பேராத பாச மிவள்கண்
ணொலிகொண் டுயிருண்ணுங் கூற்றமென் றெல்லே
கலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தா
ரிலைகொண்ட பூணினீ ரென்றெழினி சோ்ந்தா
ளிலங்குபொற் கிண்கிணியா ணக்கெழினி சோ்ந்தாள்.

   (இ - ள்.) இலைகொண்ட பூணினீர் - இலைவடிவங் கொண்ட அணிகலனுடையீர்!; இவள்கண் பலிகொண்டு பேராத பாசம் - இவள் கண்கள் உயிர்ப்பலி கொள்வதால் தன் கொலைத் தொழிலினின்றும் மீளாத காலபாசம்; எல்லே ஒலிகொண்டு உயிர் உண்ணும் கூற்றம் - (இவளோ) வெளியே தழைத்துச் சென்று உயிரைப் பருகும் கூற்றம்; என்று கலிகொண்டு தேவர் முலை கரந்து வைத்தார் - என்ற ஆரவாரத்தை உட்கொண்டு பிரமனார் எனக்கு முலையை மறைத்து வைத்தார்; என்று எழினி சேர்ந்தாள் - என்று வீணாபதி அவர்கட்கு விடைகூறித் திரையிலே மறைந்தாள்; இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள் - (அது கேட்ட) விளங்கும் பொற்கிணகிணியுடைய தத்தை நகைத்துத் தான் இருந்த இடத்தைவிட்டுத் திரை மறைவிலே அடைந்தாள்.