பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 426 

   (இ - ள்.) பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் - பருந்தும் அதன் நிழலும்போற் பாட்டும் அதற்கமைந்த யாழ் வாசினையும்; திருந்துதார்ச் சீவகற்கே - அழகிய தாரணிந்த சீவகனுக்கே; வீணைதான் தோற்பான் - வீணையிலே தான் தோற்பதற்கே; சேர்ந்தன என்று எண்ணி - அமைந்தன என்று நினைத்து; ஏந்து இலை வேல் கண்ணாள் - ஏந்திய இலைமுக வேலனைய கண்ணாளாகிய தத்தை; இளமயில்போல் - இளமையான மயிலைப் போல; விருந்தாக யாழ் பண்ணி இருந்தாள் - (தான் இதுவரை செய்யாத) புதுமையாக யாழைப் பண்ணிப் பாட அமர்ந்தாள்.

 

   (வி - ம்.) இளமயில்போல் இருந்தாளாகிய வேற்கண்ணாள் எனக் கூட்டி 'யாழ் பண்ணி' எனக் குளகமாக்கி வரும் பாட்டுடன் முடிப்பர் நச்சினார்க்கினியர். மற்றும், விருந்தாக என்பதனை, 'விருந்தாகச் சீவகற்கே சேர்ந்தன' என்று கொண்டு கூட்டுவர். சீவகன்மேற்கொண்ட காதலால் தன் பண்ணும் பாடலும் வேறுபட்டு நின்றாளென்பதைக் குறித்தே 'விருந்தாக யாழ் பண்ணி' என்றார்.

 

   பருந்து பறக்குமிடத்து முறையே உயர்ந்து அந் நிலத்தின்கண் நின்று ஆய்ந்து பின்னும் அம் முறையே மேன்மேல் உயர்கின்றாற்போலப் பாட வேண்டுதலின் அஃது உவமையாயிற்று; 'சிச்சிலி பூனை குடமுழக்கம் செம்மைத்தாம் - உச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சை நிற - வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கான் நிழற்பாவை - ”ஏயுங்கால் ஓசை இயல்பு” என்றார். 'வீணை' என்றது யாழையும் பாட்டையும். மயில் காரினைக் கருதி யிருந்தாற் போல இவளும் அவனைக் கூடும் நாளைக் கருதி யிருத்தலின் மயில்போல் என்றார். இளமயில் : இளமை - குணம்.

( 238 )
731 கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடுங்
காதி னொளிர்ந் திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப
மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர
கீதம் கிடையிலாள் பாடத் தொடங்கினாள்.

   (இ - ள்.) கிடையிலாள் - உவமையிலாளாகிய தத்தை; கோதை புறம் தாழ - கூந்தல் முதுகிலே சரிய; குண்டலமும் பொன் தோடும் காதின் ஒளிர்ந்து இலங்க - குண்டலமும் பொன் தோடும் காதிலே ஒளிவீசி விளங்க; காமர்நுதல் வியர்ப்ப - அழகிய நெற்றி வியர்க்க; மாதர் எருத்தம் இடம் கோட்டி - அழகிய கழுத்தை இடப்புறம் சாய்த்துக் கொண்டு; மாமதுரகீதம் பாடத் தொடங்கினாள் - மிகவும் இனிய இசையைப் பாடத் தொடங்கினாள்.

 

   (வி - ம்.) உட்கும் நாணும் ஒருங்கு வருதலின், 'நுதல் வியர்ப்ப' என்றார். அது தன்னை அவன் நோக்கிய வழிப் பிறந்த மெய்ப்பாடு. அது, 'புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்' (தொல். மெய்ப். 13) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க.