பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 443 

அதிர்ந்து; சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்ப - படையிலுள்ளோர் கலக்கத்துடன் முழங்கி ஆரவாரிக்க; தார்ப்பொலி மார்பன் ஓர்த்து - (அதனை) மாலையாற் பொலிவுற்ற மார்பனான சீவகன் உணர்ந்து; தன் கையில் வீணை நீக்கி - தன்கையில் இருந்த யாழை வைத்துவிட்டு; வார்ப்பொலி முலையினாட்கு வாய்திறந்து இதனைச் சொன்னான் - வாராற் பொலிவு கொண்ட முலையையுடைய தத்தைக்கு வாய்திறந்து இதனைக் கூறினான்.

 

   (வி - ம்.) கலக்கம் - முன் நின்ற நிலைகுலைதல். தத்தையின் கவினைக் கண்டு கையாறுற்றிருந்தவன் (சீவக - 739) ஆரவாரம் உண்டானதைச் செவி கொடுத்து உணர்ந்தான். 'ஓர்ந்து' என்பது ஓர்த்து என விகாரப்பட்டது. வீரத்தாற் காமங் கெட்டதென இரண்டன் சிறப்புங் கூறினார்.

( 266 )

வேறு

 
759 தேய்ந்து நுண்ணிடை நைந்துகச் செப்பினைக்
காய்ந்த வெம்முலை யாய்நின கண்கள்போ
லாய்ந்த வம்பினுக் காரிரை யாகிய
வேந்தர் வேண்டிநின் றார்விம்ம னீயென்றான்.

   (இ - ள்.) நுண் இடை தேய்ந்து நைந்து உக - நுட்பமான இடை தேய்ந்து வருந்திக் கெட; செப்பினைக் காய்ந்த வெம்முலையாய்! - செப்பைக் காய்ந்த விருப்பமூட்டும் முலைகளையுடையாய்!; நின கண்கள்போல் ஆய்ந்த அம்பினுக்கு - உன்னுடைய கண்கள் போலத் தப்பாதவாறு ஆராய்ந்தெடுத்த அம்புகட்கு; ஆர் இரை ஆகிய - நல்லிரை யாவதற்கு; வேந்தர் வேண்டி நின்றார் - அரசர்கள் விரும்பி நின்றனர்; நீ விம்மல் என்றான் - நீ வருந்தாதே என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) சீவகன் கூற்றாலேயே இந்நிகழ்ச்சி கண்டு கலங்கித் தத்தை அழத்தொடங்கினள் என்பதனை இனிதின் தேவர் உணர்த்துதல் உணர்க.

( 267 )
760 அண்ணல் கூறலு மம்மனை யோவெனாத்
துண்ணெ னெஞ்சின ளாய்த்துடித் தாயிழை
கண்ணி னீர்முலை பாயக் கலங்கினாள்
வண்ண மாக்கவின் சொல்லொடு மாய்ந்ததே.

   (இ - ள்.) அண்ணல் கூறலும் - சீவகன் அதனைக் கூறினவுடன்; ஆயிழை அம்மனையோ எனாத் துண்என் நெஞ்சினளாய்த் துடித்து - தத்தை அம்மாவோ என்று திடுக்குற்ற உள்ளத்தளாகித் துடித்து; கண்ணின் நீர் முலைபாயக் கலங்கினாள் - கண்ணீர் பெருகி முலைகளிற் பாய அழுது கலங்கினாள்; சொல்லொடு