பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 448 

769 கருதலாம் படிய தன்றிக்
  கலதியம் பிவையுங் காய்ந்த
பொருதுலாம் புகழை வேட்டிவ்
  வெஃகமும் புகைந்த வென்றான்.

   (இ - ள்.) பொருது உலாம் புகழை வேட்டு - போர் செய்தலால் உண்டாகும் புகழை விரும்பி; கருதலாம் படியது அன்றி - நினைக்கலாம் படியது அன்றாக; கலதி அம்பு இவையும் காய்ந்த - கேட்டினைச் செய்யும் அம்புகளாகிய இவையும் காய்ந்தன; இவ் எஃகமும் புகைந்த - இந்த வேல்களும் புகைந்தன; (ஆதலால்); முருகு உலாம் முல்லை மாலை மூப்பு இலா முலையினார் - மணங்கமழும் முல்லை மாலை அணிந்த இளமுலையினையுடைய நும் மனைவியர்; நும் அருகு உலாம் புலவி நோக்கத்து - (நீர் யாழ் வாசிக்க வந்ததனால்) நும்மிடத்தே பிறந்த புலவி நோக்கத்தால்; அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ - (பின்பு) தாம் பெறும் புணர்ச்சியின்பம் ஆகிய அமிர்தத்தைப் பாழே சிந்துவர் போலும்!

 

   (வி - ம்.) 'அமிர்த மென்றுகுப்ப' என்றும் பாடம்.

( 277 )
770 வாணிக மொன்றுந் தேற்றாய்
  முதலொடுங் கேடு வந்தா
லூணிகந் தீட்டப் பட்ட
  வூதிய வொழுக்கி னெஞ்சத்
தேணிகந் திலேசு நோக்கி
  யிருமுதல் கெடாமை கொள்வார்
சேணிகந் துய்யப் போநின்
  செறிதொடி யொழிய வென்றார்.

   (இ - ள்.) ஊண் இகந்து ஈட்டப்பட்ட - உணவையும் கைவிட்டுத் திரட்டப்பட்ட; முதலொடும் கேடு வந்தால் - முதலுடன் ஊதியத்திற்கும் ஒரு கேடு வந்தால்; ஊதிய ஒழுக்கின் நெஞ்சகத்து ஏண் இகந்து - ஊதியமாகிய நடப்பின் மேலே நெஞ்சத்தில் நடக்கின்ற திண்மையைக் கைவிட்டு; இலேசு நோக்கி - (இரண்டையும் இழப்பதில் முதல் பெறுகையும்) ஊதியம் என்று பார்த்து; இருமுதல் கெடாமை கொள்வார் - பெரிய முதல் கெடாதபடி அதனைக் கொள்வார் (நின் குலத்துள்ளோர்); வாணிகம் ஒன்றும் தேற்றாய் - நீயும் அது செய்யாமற் போர்குறித் தெழுதலின் வாணிக முறையொன்றும் அறிகிலாய்; நின் செறிதொடி ஒழிய - (இனி) ஊதியமாகிய நின் செறிந்த தொடியினாளை இங்கே விட்டு; சேண் அகந்து உய்யப் போ