பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 45 

இக் கருத்தினைக் ”கறவை கன்றார்த்திக் கலநிறை பொழியும் ” எனவரும் மணிமேகலையினுங் (12 : 93) காண்க.

 

   'இலஞ்சி மேய்ந்து' என்றது அங்ஙனம் அம்மேதிகள் பால்மிக்கன வாதற்குக் குறிப்பேது என்க.

( 40 )
70 வெள்ளிப்போழ் விலங்கவைத் தனையவாய் மணித்தலைக்
கொள்பவளங் கோத்தனைய காலகுன்றிச் செங்கண
வொள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறாக்
கிள்ளையோடு பாலுணுங் கேடில்பூவை பாடவே.

   (இ - ள்.) வெள்ளிப்போழ் விலங்க வைத்தனைய வாய் மணித்தலை- (அம்மாடத்திலே ) வெள்ளித்தகட்டை விலங்குதலாக வைத்தன்ன வாயினையும் அழகிய தலையினையும் ; ஒள் அகிற்புகை திரண்டது ஒக்கும் மா மணிப்புறா - ஒள்ளிய அகிலின் புகை திரண்டதைப் போன்ற கரிய நிறத்தினையும் உடைய பெரிய மணிப்புறாக்கள்; கொள்பவளம் கோத்தனைய கால குன்றிச் செங்கண் கேடுஇல் பூவை பாட- அறுத்துக்கொண்ட பவளத்தைக் கோத்தாலனைய கால்களையும் குன்றிமணியனைய சிவந்த கண்களையும் உடைய கெடுதியில்லாத பூவைகள் பாடா நிற்க ; கிள்ளையொடு பால் உணும் - கிளிகளுடன் பால் பருகும்.

 

   (வி - ம்.) மா - கருமை நிறம். மணி - அழகு.

 

   கொள்ளுதல் - அறுத்துக் கொள்ளுதல் . நடுவு பல வரை உண்மையின், 'கோத்தனைய ' என்றார். ஒள்ளகில் : ஒண்மை, அகிற்கு அடை. சிலர் பாடப் பிள்ளைகள் பாலுண்டார் என்பதும் [தொனிப் பொருளாகத்] தோன்றிற்று.

 

   இச் செய்யுளின்கண் சொற்கிடந்தவாறே உவமைகளைப் புறவிற்கே கொள்ளுதலே சிறப்பாம். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவையிற்றில் சிவற்றை வாளா பூவைக் கேற்றுகின்றார். புறவினுக்கே ஏற்றுங்கால் அஃதொரு சொல்லோவியமாகும் அருமை உணர்க.

( 41 )
71 காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை
மாடமாலை மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற்
கோடுயர்ந்த குன்றின்மேற் குழீஇயமஞ்ஞை தஞ்சிற
காடுமஞ்சி னுள்விரித் திருந்தவண்ண மன்னரே.

   (இ - ள்.) காடி உண்ட பூந்துகில் ஊட்டும் பூம்புகை கழும - கஞ்சி யூட்டப்பெற்ற பூவேலை செய்த ஆடை அகிற்புகையிலே மயங்குதலால் ; மாலை மாடம் மேல்நலார் மணிக்குழலின் மூழ்கலின் - ஒழுங்கான மாடங்களின்மேல் இருக்கின்ற நல்லாருடைய குழலில் ஊட்டும் புகையில் அக்குழல் மறைதலின் ; கோடு உயர்ந்த குன்றின்மேல் குழீஇய மஞ்ஞை-உயர்ந்த முடியை