பக்கம் எண் :

                         
காந்தருவ தத்தையார் இலம்பகம் 453 

லிட்டுக்கொண்டு; எங்கணும் எய்கணைப் படுமழை சிதறி - எங்கும் பெய்கின்ற மழைபோலக் கணையைச் சிதற; மொய் அமர் மலைந்தனர் - செறிந்த போரை மேற்கொண்டனர்.

 

   (வி - ம்.) சிதறி - சிதற : எச்சத்திரிபு.

 

   வென்றன்றி மீள்தலில்லை என்பதற்கறிகுறியாகப் போர்மறவர் பொற்றகட்டை வாயிலிட்டுப் போர் தொடங்குதல் ஒரு மரபு போலும். இவ்வாசிரியர் மேலும் ”காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு அச்சுற முழங்கி” (2303) என்றார். முருகு -மணம்.

( 286 )
779 கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூ
யிலங்கின வாட்குழா மிவுளி யேற்றன
விலங்கின தோ்த்தொகை வேழங் காய்ந்தன
சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே.

   (இ - ள்.) பெரும்படை கணை பெய்ம் மாரி தூய் கலந்தது - அரசர் பெரும்படை அம்புகளைப் பெய்யும் முகில்போலத் தூவிச் சீவகன் படையொடு கலந்தது; வாள் குழாம் இலங்கின - (இருபடையினும்) வாட்படைகள் இலங்கின; இவுளி ஏற்றன - குதிரைகளும் ஒன்றையொன்று எதிர்ந்தன; தேர்த்தொகை விலங்கின - தேர்த்திரளும் ஒன்றையொன்று தடுத்தன; வேழம் காய்ந்தன - யானைகளும் அவ்வாறே காய்ந்தன; இயமரம் சிலம்பின - ஊது கொம்புகள் ஒலித்தன; சங்கம் தெழித்த - சங்குகளும் ஒலித்தன.

 

   (வி - ம்.) இரண்டு படையும் கலந்து போர் தொடுத்தபடி கூறினார்.

 

   மாரி போலத் தூவி என்க. இவுளி - குதிரை. விலங்கின - தடுத்தன. சிலம்பின - ஒலித்தன. இயமரம் - ஊதுகொம்பு. தெழித்த - ஒலித்தன.

( 287 )
780 சுற்றணி கொடுஞ்சிலை மேகந் தூவிய
முற்றணி பிறையெயிற் றம்பு மூழ்கலி
னற்றுவீழ் குழைமுக மலர்ந்த தாமரை
மற்றவை சொரிவதோர் மாரி யொத்தவே.

   (இ - ள்.) சுற்று அணி கொடுஞ்சிலை மேகம் தூவிய - சுற்றினும் அணியப்பட்ட வளைந்த சிலையாகிய முகில் தூவிய; முற்ற அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் - முற்றினும் அணியாகப் பிறைபோலும் முனையுடைய அலகு அம்புகள் மூழ்கியதால்; அற்று வீழ் குழைமுகம் அவை அலர்ந்த தாமரை சொரிவது - அற்று வீழ்கின்ற குழையுடைய முகமாகிய அவை மலர்ந்த