பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 509 

877 பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை
யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற்
செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக்
கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள்.

   (இ - ள்.) பைம்பொன் நீள் உலகு அன்றி - பெரிய பசும் பொன்னுலகில் அன்றி; இப் பார்மிசை இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில் - இவ்வுலகிலே இவ்விடத்தே என் சுண்ணத்தை ஒப்பன உள்ளன என்றால்; செம்பொன் பாவை அன்னாய்!- செம்பொன் பாவை போன்ற சுரமஞ்சரியே!; நீ செப்பு என - நீ கூறுக என்று குணமாலை சொல்ல; கொம்பு அன்னாளும் கொதித்து இது கூறினாள் - மலர்க் கொம்பு போன்ற சுரமஞ்சரியும் சினந்து இதனைக் கூறினாள்.

 

   (வி - ம்.) இம்பர் - இவ்விடத்தே. கொம்பனாள் - பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி.

( 27 )
878 சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல
மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென
வண்ண வார்குழ லேழையர் தம்முளே
கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே.

   (இ - ள்.) சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் - சுண்ணப் பொடியாலே தோற்றோம் எனில் நீராடுவேமல்லேம்; வென்றார்க்கு எண் இல் கோடி பொன் ஈதும் என - அருகனுக்கு மாற்றற்ற கோடி பொன்னைக் கொடுக்கக் கடவேம் என்று சொல்ல; வண்ணம் வார்குழல் ஏழையர் கமழ் சுண்ணத்தின் - அழகிய நீண்ட கூந்தலையுடைய பேதையர் மணந்தரும் சுண்ணத்தினால்; தம்முளே கண் அற்றார் - தங்களுக்குள்ளே அன்பை விட்டனர்.

 

   (வி - ம்.) சுண்ணம் தோற்றலாவது - ஒருவர் சுண்ணம் ஒருவர் சுண்ணத்திற்குத் தாழ்ந்ததாய் அதனையுடையார் தோல்வியுறுதல். ஆடலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. வென்றான் - ஈண்டு அருகக்கடவுள். கண்ணுறுதல் - பகைமை கோடல்.

( 28 )

வேறு

 
879 மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற்
கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச்
சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள்
வெல்வது சூதென வேண்டி விடுத்தார்.