பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 525

(கையாற்) செய்த ஆண் பாவைகளை எல்லாம்; கதிர்முலை ஆக்கினான் - ஒளிரும் பெண்பாவை ஆக்கினான்.

(வி - ம்.) வையகம் என்றது ஈண்டு உலகம் என்னும் பொருட்டு; (வையகம் என்பது சிறப்பாக மண்ணுலகம் ஒன்றனையே குறிப்பதாகும்.) மாமணி - மாணிக்கமணி. ஐயென்றது உடன்பாட்டினைக் குறிப்பான் உணர்த்தியது. கதிர்முலை : அன்மொழித் தொகை. கதிர்முலை ஆக்கினான் என்ற குறிப்பான் ஆண்பாவையை என வருவித்தோதுக.

( 57 )

வேறு

908 சென்று காலங் குறுகினுஞ் சீவகன்
பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக
வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா
வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள்.

(இ - ள்.) காலம் சென்று குறுகினும் - வாழ்நாள் தன் எல்லையை அடைந்து குறுகியதானாலும்; சீவகன் பொன்துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக - சீவகனுடைய திருருமகள் துயிலும் மார்பைத் தழுவுறின் கூடுவதாக; அன்றி என்நிறை யார் அழிப்பார்?- அல்லது என் நிறையை அழிப்பார் ஒருவரும் இல்லை; எனா ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள் - என்று ஒன்றிய நினைவினளாகி ஒடுங்கினாள்.

(வி - ம்.) காலம் ஈண்டு வாழ்நாள் மேனின்றது. யாரழிப்பார் என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்திநின்றது.

( 58 )
909 இன்பக் காரண மாம்விளை யாட்டினுட்
டுன்பக் காரண மாய்த்துறப் பித்திடு
மென்ப தேநினைந் தீர்மலர் மாலை தன்
னன்பி னாலவ லித்தழு திட்டாள்.

(இ - ள்.) இன்பக் காரணம் ஆம் விளையாட்டினுள் - இன்பத்திற்குக் காரணமாகிய விளையாட்டின்கண்; துன்பக் காரணமாய் - அவ் விளையாட்டே துன்பத்திற்குக் காரணமாய்; துறப்பித்திடும் என்பதே நினைந்து - இன்பத்தை நீக்கிடும் என்பதை எண்ணி; ஈர் மலர்மாலை - குளிர்ந்த மலர்போன்ற குணமாலை; தன் அன்பினால் அவலித்து அழுதிட்டாள் - தன் அன்பால் எண்ணித் துன்புற்று அழுதனள்.

(வி - ம்.) 'உள்' என்பதற்கு இருவர் மனமும் ஒன்றாய் நடக்கும் 'கடுநட்பு' என்று பொருளுரைப்பர் நச்சினார்ககினியர்.

அவர், 'கடுநட்புப் பகை காட்டும்' என்னும் பழமொழியை இதற்குச் சான்றாக்கிவிட்டு, மேலும், ”இனி, விளையாட்டினுள் அவ் விளையாட்டுத்