| குணமாலையார் இலம்பகம் | 
526  | 
 
  | 
 
| 
 தானே துன்பக் காரணமாய் இன்பத்தைத் துறப்பிக்கும் என்ற பழமொழியுமாம். அது, 'விளையாட்டே சலாமம்' என்னும் பழமொழி” என்றுங் கூறுவர். 
 | 
  | 
 
| 
    இன்பக் காரணமே துன்பத்திற்கும் காரணமாதலை இக் காவியத்தினும் சிலப்பதிகாரத்தினும் இராமாயணத்தினும் காணலாம். ஏன்? காவியங்களனைத்தினும் காணலாம் போலும். அவளது குணநலந் தோன்ற 'ஈர்மலர்மாலை' என்றார். இச்செய்யுளான் குணமாலை என்னும் அவள் பெயர்க்கேற்ப அவள் குணநலந் தோன்றுதலுணர்க. 
 | 
( 59 ) | 
 
 
|  910 | 
தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் |  
|   | 
வண்ண வார்தளிப் பிண்டியி னானடிக் |  
|   | 
கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை |  
|   | 
வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) தண்அம் தீ புனல் ஆடிய - குளிர்ந்த இனிய நீர் விளையாட்டை வேண்டி; தண்மலர் வண்ணம் வார் தளிர்ப்பிண்டியினான் அடிக்கு - குளிர்ந்த மலருடன் அழகிய நீண்ட தளிரையுடைய அசோகின் நிழலில் அமர்ந்த அருகனடிக்கென; எண்ணி - நினைந்து; ஆயிரம் ஏந்து பொன்தாமரை வண்ணமாமலர் - ஆயிரம் பொற்றாமரை மலர்களையும் பிற அழகிய மலர்களையும்; ஏற்றி வணங்கினாள் - இட்டுத் தொழுதாள். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) எண்ணி - இந் நட்பினைப் பிரித்த தீவினை நீங்கும் வழி இதுவென நினைந்து. புனலாடப் போகிறவள் இப் பிரிவுக்குக் கழுவாய் கண்டாள். 
 | 
( 60 ) | 
 
 
|  911 | 
ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென |  
|   | 
மாசை மாக்கடன் மன்னவ னாடலின் |  
|   | 
மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ |  
|   | 
ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என - விரும்பிய மக்களுடன் அந்தணரும் கொள்க என்று; மாசை மாக்கடல் மன்னவன் ஆடலின் - பெரிய பொற்கடலை அரசன் கையாண்டதால்; மீசை நீள் விசும்பின் தலைச்சென்றது ஓர் ஓசையால் - மேலே உள்ள பெரிய வானிலே சென்றதான ஓர் ஒலியுடன்; சனம் ஒள்நிதி உண்டது - மக்கள் திரள் சிறந்த நிதியை வாரிச் சென்றது. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) 'ஆடுதல்' என்பதற்குப் 'பிறத்தல்' என்று பொருள் கொண்டும் 'கடல்' என்னாது, 'கடன்' என்றும் கொண்டு 'பெரியதொரு கடனாகப் பொன்னிலே பிறத்தலின்' என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். பொன்னிலே பிறத்தலாவது பொன்னாலே பசு ஒன்றைச் செய்து அதன் வாயாற் புகுந்து பின்புறத்தே வெளிவருதல். பிறகு 
 | 
  |