பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 539 

மிகுதியுடைய சோர்வுஇல் பொருள் ஒன்று - இனிமையின் மேம்பட்ட அழிவற்ற பொருளால் ஓருயிரை; நவையின் அகல நோக்கி - குற்றத்தினின்றும் நீங்குமாறு பார்க்க; அதுதான் நயந்தவண்ணம் மொழிவாம் - அவ்வுயிர் அப் பொருளால் விரும்பின தன்மையை உரைப்போம்.

 

   (வி - ம்.) மதியின் : இன் : நீங்கற்பொருள். ஒன்று - ஓருயிர்; நவையின் அகலுதல் - நாயுடம்பினின்றும் நீங்க; நோக்கி - நோக்க. சோர்வில் பொருள் பஞ்ச நமஸ்காரமந்திரம்.

( 83 )

வேறு

 
934 அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை
வந்தொரு நாய்கது விற்றது கண்டவ
ருய்ந்தினிப் போதி யெனக்கனக் றோடினர்
சிந்தையி னின்றொளிர் தீயன நீரார்.

   (இ - ள்.) அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுக் குவாலினை - அந்தணர்கட்குக் சமைத்த சோற்றின் திரளை; வந்து ஒரு நாய் கதுவிற்று - ஒருநாய் வந்து கௌவியது; சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார் அவர் அதுகண்டு - உள்ளத்திலே விடாமல் நின்று ஒளிரும் தீப்போன்ற பண்பினராகிய அவர்கள் அந்நாயைக் கண்டு; இனி உய்ந்து போதி எனக் கனன்று ஓடினர்- இனி நீ பிழைத்துப் போவாய் என்று கூறிச் சினந்து ஓடி வந்தனர்.

 

   (வி - ம்.) அக்கினி சித்தரென அவர்களின் கொடுமை கூறினர்.

 

   சோற்றுக் குவால் - சோற்றுக்குவியல். ஒரு நாய்வந்து என மாறுக. அவர் அதுகண்டு என மாறுக. உய்ந்தினிப்போதி என்றது குறிப்புச் சொல் ; இனி நீ உய்ந்துபோகவியலாது; நின்னைக் கொன்றொழிப்பேம் என்பது கருத்து.

( 84 )
935 கல்லொடு வன்றடி கையினர் காற்றினும்
வல்விரைந் தோடி வளைத்தன ராகிக்
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே.

   (இ - ள்.) கல்லொடு வன்தடி கையினர் - (அவர்கள்) கல்லையும் வலிய தடியையும் கொண்ட கையினராய்; காற்றினும் வல்விரைந்து ஓடி வளைந்தனர் ஆகி - காற்றினும் கடிது விரைந்து ஓடி வளைத்துக்கொண்டவராய்; கொன்றிடு கூற்றினும் கொல்வது மேயினர் - கொல்லுமியல்புடைய கூற்றுவனினும் மேம்பட்டுக் கொல்லத் தொடங்கினர்; வல்வினையார் வலைப்பட்டது - (அதுவும்) கொடிய வினையாளர் கையில் அகப்பட்டது.