பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 543 

   (இ - ள்.) அவர் மீண்டு ஏகுதலும் - அவ்விரு திறத்தாரும் திரும்பிச் சென்றவுடன்; விடை அன்னவன் ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி - இடபம் போன்ற சீவகன் தன்னுடன் குழுமிய தோழருடன் சென்று ; மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது காண்டலும் - இழந்த பற்களையுடைய அந்த நாய் வலிமை யிழந்ததாகக் காணப்பட்டவுடன்; கட்கு இனியான் கலுழ்ந்திட்டான் - கண்ணுக்கினியவன் அழுதிட்டான்.

 

   (வி - ம்.) நீந்திய நாய் கரையேறிச் சோர்ந்து உயிர் போகுந்தறுவாயிற் கிடந்ததைச் சீவகன் தோழருடனே சென்று கண்டான். அன்றி, நச்சினார்க்கினியர் முன்னர் (936) முடித்தவாறு கொள்ளினுங் கொள்க.

 

   நச்சினார்க்கினியர் முன்னர்த் தம்பியை விட்டுத் தனியே நின்றானென்பதற்கேற்ப, 'இவன் வினோதம் ஒழிந்து நிற்றலின், தோழல் வந்து திரண்டமை தோன்ற, 'ஈண்டிய' என்றார். எனவே, தம்பியர் வந்தமையும் பெறுதும்' என்றுரைத்தனர். அருளினால், இவனை விடை என்றார்.

 

   இச் செய்யுள் சீவகனுடைய அருட்பண்பை விளக்கிற்று.

( 92 )
943 நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக்
காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர்<
சேயுடம் பெய்துவை செல்கதி மந்திர
நீயுடம் பட்டு நினைமதி யென்றான்.

   (இ - ள்.) நாய் உடம்பு இவண் இட்டு - நாய் உடலை இங்கே விட்டு; நந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்று - வளர்ந்த பேரொளியை உடைய திங்கள் மண்டிலம் போல; ஒளி கால்வது ஓர் சேய் உடம்பு செல்கதி எய்துவை - ஒளி வீசுவதாகிய ஒரு பெரிய உடம்பை நீ செல்லுங்கதியிலே அடைவாய்; மந்தரம் நீ உடம்பட்டு நினை என்றான் - (அதற்காக) யான் கூறுகின்ற மந்திரத்தை நீ ஒருமனப்பட்டு நினைவாயாக என்றான்.

 

   (வி - ம்.) நினைமதி : மதி : முன்னிலை அசை.

 

   நந்துதல் - பெருகுதல். நந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வதோர் சேயுடம்பு என்றது தெய்வ உடம்பினை. காய்கதிர் மண்டலம் என்றது திங்கள் மண்டிலத்தை.

( 93 )
944 என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ்
சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி<
யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங்
குன்றனை யான்பதங் கூற வலித்தான்.

   (இ - ள்.) என்றலும் - என்று கூறின அளவிலே; தன் செவி ஓர்த்து - (அது) தன் காதினாலே கேட்டுச் சிந்தித்து;