பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 570 

   மூரி - பெருமை. தெண்டிரை - கடல் : அன்மொழி; கடல்போன்ற பெரிய நிதி என்க. பாவை : குணமாலை, கோதை : குணமாலை.

( 137 )
988 நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய
கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிற
நைய வந்ததென் னங்கைக் கின்றென
வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார்.

   (இ - ள்.) நெய்பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய கைசெய் மாலைபோல் - நெய்வார்த்த மிகுநெருப்பின் முடியிலே அழுத்திய, புனைந்த மலர்மாலை போல; கரிந்து பொன்னிறம் நைய - கரிந்து பொன்நிறம் வாடுமாறு; நங்கைக்கு இன்று வந்தது என் என - குணமாலைக்கு இன்று நேர்ந்தது யாது என்று (தாய்) வினவ; உய்தல் வேட்கையால் உரைத்தல் மேயினர் - (தோழியரும் அத்த ய் இறவாமல்) வாழவேண்டும் என்னும் ஆசையால் (யானை கொல்லப் புகுந்ததென்பதை) உரையாமற் காத்தனர்.

 

   (வி - ம்.) குணமாலை பெருந்துயர்க்கிலக்காகி உய்ந்தமை தோன்ற நெய்பெய் நீளெரி என உவமையை விதந்தார்; இது துயரத்திற்குவமை. கைசெய்மாலை - கையாற் புனைந்த மாலை. உய்தல் வேட்கையால் என்பதற்கு இப் பேரிடரைக்கேட்ட அளவில் அத் தாய் இறந்துபடுவள் என்றும் அங்ஙனம் இறந்துபடாமலிருத்தற்பொருட்டு என்று கோடலே பொருந்தும். இதுவே நச்சினாக்கினியர் கருத்துமாகும். 'குணமாலை பிழைத்தலிலுள்ள விருப்பத்தால்' என்பாரும் உளர்.

( 138 )
989 முருகு விண்டுலா முல்லைக் கத்திகை
பருகி வண்டுலாம் பல்கு ழலினாள்
வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத்
துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள்.

   (இ - ள்.) முருகு விண்டு உலாம் முல்லைக் கத்திகை - மணம் விரிந்து பரவும் முல்லைத் தொடையில்; வண்டு பருகி உலாம் பல்குழலினாள் - வண்டுகள் தேனைப் பருகி உலவும் பல் குழலாளாகிய குணமாலையை; தாய் வருக என்று வாட்கண் நீர் துடைத்து - அவர் கூறாமையான அதனை அறியாத அவள் அன்னை வருக என அழைத்து, வாளனைய கண்களிலிருந்து பெருகும் நீரைத் துடைத்து; உருகும் நுண் இடை ஒசியப் புல்லினாள் - தேயும் நுண்ணிடை வருந்தத் தழுவினாள்.

 

   (வி - ம்.) முருகு - மணம். கத்திகை - மாலை. கூந்தல் ஐம்பால் எனப்படுதலின் பல்குழலினாள் என்றார். குழலினாள் : குணமாலை. உருகும் - மெலிகின்ற. ஓசிய - வருந்த.

( 139 )