பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 575 

   (வி - ம்.) அவன் உருவெளியையே நோக்கி வேறொரு பொருளினை நோக்காமையின், காணுதல் தொழிலின்றிக், 'கண்ணும் வாள்அற்ற' என்றாள். இஃது எதர்பெய்து பரிதல் (தொல். மெய்ப். 22-பேர்), 'வளை சோருதல்' உடம்பு நனிசுருங்கல் (தொல். மெய்ப். 22-பேர்) நெஞ்சும் புண் போன்று புலம்பும்.. இது முதலாகக் கலக்கம் (தொல். மெய்ப். 18-பேர்); கூறத் தகாதன கூறுதலின், அது தலைவிக்காயின், 'பிறங்கிரு முந்நீர் வெறுமணலாகப் - புறங்காலிற் போக விறைப்பேன்' (கலி. 144) என்றாற் போல்வனவும், தலைவற்காயின், மடலேறுதல் முதலிய கூறலுமாம்.

( 148 )
999 சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன்
வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர
வோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக்
கால வேற்றடங் கண்ணி கருதினாள்.

   (இ - ள்.) சோலைவேய் மருள் சூழ்வளைத் தோளி - சோலையில் மூங்கிலென மருளும் வளையணிந்த தோளியாகிய; காலவேல் தடம் கண்ணி - காலன் வேலனைய பெருங்கண்ணினாள்; தன் வேட்கை - தன் காமம்; வேலை மாக்கடல் மிக்கு ஊர்தா - கரையையுடைய பெரிய கடல்போல மிகுந்து மேற்கொளலால்; ஓலைதாழ் பெண்ணை மாமடல் ஊர்தலை - (ஆடவர் செயலாகிய) ஓலை தங்கிய பனை மாமடல் ஊர்வதை; கருதினாள் - நினைத்தாள்.

 

   (வி - ம்.) 'மடலூர்தல்' ஆடவர்க்கே யன்றிப் பெண்டிருக்கில்லையாதலின் 'கருதினாள்' என்றார்.

 

   சோலைவேய், பசுமைக் குவமை.

 

   ஈண்டுக் கூறியது, புலனெறி வழக்கம் அல்லாத காந்தருவமாய் ஆசுரத்தின் பாற்பாடும் கைக்கிளையாதலின், மெய்ப்பாட்டுப் பொருள்களை முறையிற் கூறாது மயங்கக் கூறினாரென்று கொள்க.

 

   நச்சினார்க்கினியர் 997-முதல் 999-வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டும் பொருள் முடிபு:-

 

   ”வளைத்தோளி, கண்ணி, தன் வேட்கை கடனீர்போல மிக்குப் பரத்தலின், தவஞ்செய்யாதாரைப்போல மூங்கையும் ஆயினேன்; கண்ணும் வாளற்ற; வளையும் சோரும்; நெஞ்சும் புலம்பும்; இங்ஙனம் எல்லையில்லாத காமம் முழுக்க நின்று சுட்டாலும் பெண்ணை மாமடலூர்தலை மேற்செல்லாத பேதைச் சாதியிற் காட்டின் கொடுமை மிக்கது பெண்ணல்ல தில்லையாய் இருந்தது என்று கூறி. இக் காலத்தே பிழைக்க லாவதொரு வாயிலுண்டாமோ என்று கருதினான்.

( 149 )
1000 உய்யு மாறுரை யுன்னை யலாலிலேன்
செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயென
நைய னங்கையிற் நாட்டகத் துண்டெனிற்
றைய லாய்சம ழாதுரை யென்றதே.