பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 59 

   (இ - ள்.) அரும்பொனும் வெள்ளியும் மணியும் அல்லது - அரிய பொன்னாலும் வெள்ளியாலும் மணியாலும் ஆன குடங்களல்லாமல்; கருங்கலம் தோய்வு இலாக் காமர் பூந்துறை - மட்குடம் முகவாத அழகிய மலர்நிறைந்த நீர்த்துறை; குரும்பை மென்முலையின்மேல் குலாய குங்குமம் - (அங்கே குளிக்கும் மகளிரின்) தென்னங் குரும்பை அனைய மெல்லிய கொங்கை களின்மேற் பூசிய குங்குமம்; விருந்து செய்திட வெறி மேனி சேந்தது - (தன்னைப்) புதுமை செய்தலால் மணத்துடன் மெய்சிவந்தது.

 

   (வி - ம்.) பொன் முதலிய காரணப் பெயர் அவற்றான் இயன்ற காரியத்தின்மேல் நின்ற [காரண] ஆகுபெயர். வெறி - மணம். காமம் மரு என்னும் சொல் காமர் எனக் குறைந்தது.

 

   கருங்கலம் வனைந்து சுடப்படுதலாற் கருநிறமுடைய மட்கலம் என்பது படநின்றது.

( 68 )
98 பட்டவர்த் தப்பலிற் பரவை யேந்தல்கு
லட்டொளி யரத்தவாய்க் கணிகை யல்லது
மட்டுடை மணமகண் மலர்ந்த போதினாற்
கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே.

   (இ - ள்.) பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல் அட்டுஒளி அரத்தம் வாய்க் கணிகை - அகப்பட்டவரைக் கரை ஏறவிடாமற் கொல்வதனாற் கடலனைய ஏந்திய அல்குலையும், உருக்கிய ஒளிமிகும் அரக்கனைய வாயையும் உடைய பரத்தையை ஒக்கும் ; அல்லது மலர்ந்த போதினால் மட்டுஉடை மணமகள் - அல்லதெனில் மலர்ந்த பூவினாற் காமபானத்தை உடைய மணஞ்செய்த மகளை ஒக்கும் ; காவலின் கட்டு உடைக் காமர் கன்னி - காவலால் கற்பித்த வழிநிற்கும் அழகிய கன்னிப்பெண்ணை ஒக்கும்.

 

   (வி - ம்.) அட்டு ஒளி அரத்தம் - உருக்கி ஒளியையுடைய அரக்கு. மட்டு - காம பானம். கட்டு - கற்பித்தல் [பெற்றோரால்].

 

   அகழி தப்பலானே கணிகையை ஒக்கும், மலர்களையுடைமையால் புது மணமகளை ஒக்கும்; காவலில் கன்னியை ஒக்கும் என்க. தப்புதல் - கொல்லுதல்.

( 69 )
99 நிரைகதிர் நித்திலங் கோத்து வைத்தபோல்
விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பாளையுங்
குறைமதுக் குவளைகள் கிடங்கிற் பூத்தவு
முரையினோ ரோசனை உலாவி நாறுமே.

   (இ - ள்.) நிரைகதிர் நித்திலம் கோத்து வைத்தபோல் - ஒழுங்காக ஒளிவிடும் முத்துக்களைக் கோத்து வைத்தாற்போல் ;