பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 614 

1074 தோளாற் றழுவித் துவர்த்தொண் டையஞ்செவ்வாய்
மீளா மணிமே கலைமின் னின்மிளிர
வாளார் மணிப்பூ ணவன்மாதரம் பாவைதன்னை
நாளாற் பெற்றநல் லமிர்தென்ன நயந்தான்.

   (இ - ள்.) வாள்ஆர் மணிப்பூணவன் மாதர் அம் பாவை தன்னை - ஒளி பொருந்திய மணிக்கலனணிந்தவன் விருப்பூட்டும் அழகிய பாவையாளை; தோளால் தழுவி - தோள்களால் தழுவி ; மீளா மணிமேகலை மின்னின் மிளிர - நீங்காத மணிமேகலை மின்னென ஒளிவிட; துவர்த் தொண்டை அம் செய்வாய் - சிவந்த கொவ்வைக் கனியனைய இதழை ; நாளாற் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான் - நாட் காலத்திலே பெற்ற இனிய அமிர்தம் என்ன நுகர்ந்தான்.

 

   (வி - ம்.) 'மீளா' என்பதனை 'அமிர்து'க்கு' அடையாக்கி, 'மீளா அமிர்து - கருடன் வாங்கிவராத அமிர்து 'என்பர் நச்சினார்க்கினியர். நயத்தல் - பருகுதல் மேற்று.

( 224 )

வேறு

 
1075 சித்திர மணிக்குழை திளைக்கும் வாண்முகத்
தொத்தொளிர் பவளவா யோவக் கைவினைத்
தத்தரி நெடுங்கணா டன்னொ டாடுநாள்
வித்தகற் குற்றது விளம்பு கின்றதே.

   (இ - ள்.) சித்திர மணிக்குழை திளைக்கும் வாள் முகத்து - அழகிய மணிக்குழை பயிலும் ஒளியுறு முகத்தினையும்; பவளம் ஒத்து ஒளிர்வாய் - பவளத்தை யொத்து விளங்கும் வாயினையும்; ஓவக் கைவினை - ஓவியம் அனைய ஒப்பனையையும் உடைய; தத்து அரி நெடுங்கணாள் தன்னொடு - காதொடு மோதும் செவ்வரி பரவிய நீண்ட கண்ணாளான குணமாலையுடன்; ஆடும்நாள் - இங்ஙனம் கூடியாடும் நாளிலே; வித்தகற்கு உற்றது விளம்புகின்றது - திறமுடைய சீவகனுக்கு நேர்ந்த தீவினை இனி உரைக்கப்புகுவது.

 

   (வி - ம்.) 'ஓவக் கைவினை' என்பதற்கு 'ஓகை வீணை' என்பதும் பாடம். மணிக்குழை - ஒன்பது வகை மணிகளைப் பதித்துப் பொன்னாற் செய்யப்பட்ட காதணி. இரு செவிகளினும் புனைந்த காதணிகளின் ஒளி திளைத்தலால் விளங்கும் முகம் என்பார், ”குழைதிளைக்கும் வரள் முகம்” என்றார்.

 

   ஓவக் கைவினை - ஓவியம்போன்ற தொழிற்சிறப்பு. வித்தகன் : சீவகன். இனி யாம் விளம்புகின்றது வித்தகற்குற்றது என்க.

( 225 )