பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 642 

நிமிர்ந்து - நிமிர்ந்து அமர்ந்து; திண்தோள் ஊழ்பிணைந்து - திண்ணிய தோளில் கையோடு கைமாறி ஏறத் தட்டி ; உருமின் சீறி - இடியென முழங்கி ; உடல்சினம் கடவச் சொன்னான் - மாறுபடும் சீற்றம் உந்த அரசன் கூறினான்.

 

   (வி - ம்.) பீழை: பிழையின் விகாரம். 'மாநிரை பெயர்த்த காளை' என்றான் மாநிரை பெயர்த்தது அரசனுக்குற்ற வடுவை நீக்கலும் அறமும் ஆகி நின்றதுபோல இதுவும் ஆகும் எனக் கருதிச் செய்தான் என்பது தோன்ற.

 

   நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் இதனையும் ஒரு தொடராக்கி, 'இன்னதே குற்றமாயின் குணமினி யாது?' என்றதற்கு முகம் ஆகாமை கண்டு, மகளிர் நடுக்கத்தை நீக்கல் ஆண்மக்கள் கடனென்று தோற்றானாய்த் தான் பெயர்த்த மாநிரையென்றெண்ணி, அறிவின்மையாலே துணிந்த குற்றத்தைப் பொறுப்பாய் என்றான் ; பின்னும் செவ்வி பெறாமையின் தொன்றுதொட்டு வ்ந்த பொருள் எலாம் தருவேன்; எனக்காகப் பொறுப்பாயாக' என்றான், - எனக் கொண்டு கூட்டுவர்.

( 270 )
1121 ஆய்களிற் றசனி வேக
  மதன்மருப் பூசி யாகச்
சீவக னகன்ற மார்ப
  மோலையாகத் திசைகள் கேட்பக்
காய்பவன் கள்வ ரென்ன
  வெழுதுவித் திடுவ லின்னே
நீபரி வொழிந்து போய்நின்
  னகம்புகு நினைய லென்றான்.

   (இ - ள்.) ஆய்களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக - அவனாற் சோர்வுற்ற களிறாகிய அசனி வேகத்தின் கொம்பு ஊசியாகவும் ; சீவகன், அகன்ற மார்பம் ஓலைஆ - சீவகனுடைய விரிந்த மார்பு ஓலையாகவும் கொண்டு ; திசைகள் கேட்ப - திசைகள் அறியுமாறு ; கள்வர் காய்பவன் என்ன - கள்வரைக் கொல்லுவேன்போல ; இன்னே எழுதுவித்திடுவல் - இப்போதே எழுதுவிப்பேன் ; நீ பரிவு ஒழிந்துபோய் - நீ வருத்தம் நீங்கிச் சென்று ; நின் அகம்புகு - நின் மனையை அடைக ; நினையல் என்றான் - இதனை நினையாதே என்றான்.

 

   (வி - ம்.) 'திசைகள் கேட்ப' என்றான் வெள்ளிமலைக்கும் இவனால் வெல்லப்பட்ட அரசருக்கும் அறிவிப்பேன் என்னுங் கருத்துடன். கொல்லுதலை எழுதுவிப்பேன் என்றான், அசனி வேகம் என்னும் களிற்றின் கொம்பை ஊசியாகக்கொண்டு சீவகன் மார்பினை ஓலையாக வைத்து எழுதுவேன் என்றது கொல்வேன் என்பதைக் குறித்தது.

( 271 )