பக்கம் எண் :

               
குணமாலையார் இலம்பகம் 647 

   (இ - ள்.) வம்பு அவிழ்கோதை!- மணம் விரியும் மாலையாய்!; தந்த வான்துவர்க் காயை வீழ்த்து - நான் தந்த சிறந்த துவர்க்காய் ஒன்றை நீ வீழ்ப்ப ; ஓர் செம்பழுக்காயை வாங்கித் திருநிலத்து எடுத்துக்கொண்டு - ஒரு செம்மையான பழுக்காயை வளைந்து நீ வழிபாடு செய்த நிலத்திலிருந்து எடுத்து; ஆங்கு, அம்பு அழ நீண்ட வாள்கண் அலமரும் அணிசெய் அம்பூங் கொம்பு அடு நுசுப்பினாய்க்கு - அதனை, அம்பு வருந்த நீண்ட ஒளிமிகுங் கண்களையும், அசையும் அழகிய பூங்கொம்பை வருத்தும் இடையினையுமுடைய நினக்கு ; தந்தனென், பேணிக் கொண்டாய் - கொடுத்தேன் நீ, அதனைக் காப்பாற்றிக் கொண்டாய்.

 

   (வி - ம்.) வம்பு - மணம். கோதை - முன்னிலைப் புறமொழி. யான் தந்த என்க. வீழ்த்த - வீழ்ப்ப. வாங்கி - குனிந்து. அலமரும் நுசுப்பு, அணிசெய் நுசுப்பு அம்பூங்கொம்பு அடுநுசுப்பு எனத் தனித்தனி கூட்டுக.

( 278 )
1129 பெற்றவந் நிமித்தத் தானும்
  பிறந்தசொல் வகையி னானு
மற்றமின் மணியை யங்கைக்
  கொண்டவர் கண்டு காட்டக்
கற்பகங் காம வல்லி
  யனையநீர் கேண்மி னென்று
முற்றுபு கனிந்த சொல்லான்
  முனிவரன் மொழியு மன்றே.

   (இ - ள்.) பெற்ற அந் நிமித்தத்தானும் - (முனிவனுக்கு நம்மாற்) கிடைத்த அந்த நிமித்தத்தாலும் ; பிறந்த சொல் வகையினானும் - என் வாயிற் பிறந்த சொல் வகையாலும் ; அற்றம் இல் மணியை அங்கைக் கொண்டவர் - அழிவற்ற இறைவனாகிய மணியை அங்கையிலே கொண்டவர் ; கண்டு காட்ட - அறிந்து நமக்குக் கூறவேண்டி ; கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்மின் என்று - கற்பகத்தையும் காமவல்லியையும் போன்ற நீங்கள் கேளுங்கோள் என்று ; முற்றுபு கனிந்த சொல்லான் - முதிர்ந்து கனிந்த சொல்லாலே; முனிவரன் மொழியும் - முனிவரன் கூறுவான்.

 

   (வி - ம்.) நிமித்தம் : துவர்க்காயை வீழ்த்துப் பழுக்காயை எடுத்தது. சொல்வகை: இறக்கும் என்னாது சென்று பிறக்கும் என்றதனாற் போமதுவும் பிறக்குமதுவும் சொல்லியது. கொண்டவர், முனிவரன்: பன்மை யொருமை மயக்கம்.