பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 651 

 

   (இ - ள்.) சிலையொடு செல்வன் நின்றால் - வில்லொடு சீவகன் நின்றால்; தேவரும் வணக்கல் ஆற்றார் - வானவரும் அவனைத் தாழ்வித்தல் ஆற்றார் ; முலையுடைத்தாயோடு எண்ணி - நற்றாயொடு சூழ்ந்து ; தந்தை இக்கொடுமை செய்தான் - தந்தை இக் கொடிய செயலைச் செய்திருத்தல் வேண்டும் ; கலைவல்லீர், இன்னும் இன்னது கேண்மின் - கலைவல்ல தோழர்களே ! மற்றும் இதனையுங் கேட்பீராக ; என்று உரைக்கும் ஆங்கண் - என்று கூறும் அப்போது; விரைவொடு சென்ற ஒற்று ஆள் - அங்கே விரைந்து வந்த ஒற்றன் ; விளைந்தஆ பேசுகின்றான் - நேர்ந்த ஆறு இதுவெனச் செப்புகின்றான்.

 

   (வி - ம்.) 'ஆறு' என்பது 'ஆ' எனக் கடைகுறைந்து நின்றது.

( 285 )
1136 இட்டிவேல் குந்தங் கூர்வா
  ளிருஞ்சிலை யிருப்புச் சுற்றார்
நெட்டிலைச் சூலம் வெய்ய
  முளைத்தண்டு நெருங்க வேந்தி
யெட்டெலாத் திசையு மீண்டி
  யெழாயிரத் திரட்டி மள்ளர்
கட்டழற் கதிரை யூர்கோள்
  வளைத்தவா வளைத்துக் கொண்டார்.

   (இ - ள்.) இட்டிவேல்குந்தம் கூர்வாள் இருஞ்சிலை இருப்புச் சுற்றுஆர் நெடுஇலைச் சூலம் வெய்ய முளைத்தண்டு - ஈட்டியும் வேலும் குந்தமும் வாளும் வில்லும் இருப்புப்பூண் அமைந்த நீண்ட இலையையுடைய சூலமும் கொடிய முளையையுடைய தண்டும் ; நெருங்க ஏந்தி - செறிய எடுத்துக்கொண்டு ; எட்டு எலாத் திசையும் ஈண்டி - எட்டாகிய எல்லாத் திசையினும் வந்து நிறைந்து; எழாயிரத்து இரட்டி மள்ளர் - பதினாலாயிரம் வீரர் ; கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தஆ -மிகுந்த வெப்பமுடைய ஞாயிற்றைப் பரிவேடிப்பு வளைந்தவாறு போல; வளைத்துக் கொண்டார் - வளைத்துக் கொண்டனர்.

 

   (வி - ம்.) ஈட்டி : இட்டியென விகாரப்பட்டது. இருப்புச் சுற்று - பூண்.

( 286 )