பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 66 

110 அஞ்சிலம் பொலியோ டல்குற் கலையொலி யணிந்த முன்கைப்
பஞ்சிமெல் விரலிற் பாணி பண்ணொலி பவழச் செவ்வாய்
யஞ்சிநோ்ந் துயிர்க்குந் தேன்சோர் குழலொலி முழவி னோசை
துஞ்சலி லோசை தம்மாற் றுறக்கமும் நிகர்க்க லாதே.

   (இ - ள்.) அம் சிலம்பு ஒலியோடு - அழகிய சிலம்பொலியுடன்; அல்குல் கலையொலி - அல்குலில் அணிந்த மேகலையின் ஒலியும்; முன்கை அணிந்த பஞ்சி மெல்விரலில் பாணி - முன்பு சேடியர் கையினால் செம்பஞ்சணிந்த மெல்லிய விரலால் எழுப்பும் யாழொலியும்; பவழச் செவ்வாய் பண்ஒலி - பவழமனைய சிவந்த வாயினால் எழுப்பும் பாட்டொலியும்; பவழச் செவ்வாய் அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன்சேர் குழல்ஒலி - பவழச் செவ்வாய் பொருந்துதற்கு முதலில் அஞ்சினும் பொருந்தியபின் நேர்ந்து ஊதும் தேனனைய இனிமை பொருந்திய குழல் ஒலியும்; முழவின் ஓசை துஞ்சல்இல் ஓசை தம்மால் - முழவின் ஒலியும் ஆகிய நீங்கா ஒலிகளாலே; துறக்கமும் நிகர்க்கலாது - (இச் சேரிக்கு) வானுலகும் ஒவ்வாது.

 

   (வி - ம்.) செவ்வாயை முன்னும் பின்னும் பண் என்பதனோடும் குழல் என்பதனோடும் கூட்டுக.

( 81 )
111 தேனுலா மதுச்செய் கோதை தேம்புகை கமழ வூட்ட
வானுலாஞ் சுடர்கண் மூடி மாநக ரிரவு செய்யப்
பானிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேலுல கனைய தொன்றே.

   (இ - ள்.) தேன்உலாம் மதுச்செய் கோதை தேம்புகை கமழ ஊட்ட - வண்டுகள் உலவும் தேன்பொருந்திய மாலைக்கு நறும்புகையைக் கமழுமாறு ஊட்டுதலால்; வான்உலாம் சுடர்கள் மூடி மாநகர் இரவு செய்ய - வானில் உலவும் ஞாயிற்றின் கதிர்களை மறைத்து மாநகரிற் பகலிலேயே இரவை உண்டாக்கவும்; நல்லார் அணிகலம் பால்நிலாச் சொரிந்து பகலைச் செய்ய - நல்லார் அணிகலத்தின் மணிகள் பாலனைய நிலவைச் சொரிந்து இரவிலும் பகற்பொழுதை உண்டாக்கவும்; வேனிலான் விழைந்த சேரி மேலுலகு அனையது ஒன்றே - காமன் விரும்பிய அச்சேரி வானுலகு போன்ற தொன்றேயாயிற்று.

 

   (வி - ம்.) ஏகாரம் : தேற்றம். இரவும் பகலும் இன்மையின் துறக்கம் ஒத்தது. இனி, 'பால் - பகுதி, நிலா - ஒளி' என்றும் உரைப்ப; 'நிலாத்தலைத் திகழும் பைம்பூண் '(சீவக. 1950) , 'பணிநிலா வீசும் பைம்பொற்கொடி' (சீவக. 2531) என்றாற்போல.

( 82 )