பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 686 

வேறு

1199 அங்கதன் றனதிடங் கடந்து போம்வழிப்
பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்துரா
யங்கநாட் டரிவையர் கூந்த னாறித்தே
னெங்குமொய்த் திழிவதோர் யாறு தோன்றுமே

   (இ - ள்.) அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழி - அவ்விடத்தில் அந்த நாட்டின் இடத்தைக் கடந்து செல்லும்போது; பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்து உராய் - மிகுதியான அழகிய சண்பக மலரைப் போர்த்துப் பரவி; அங்கு அந்நாட்டு அரிவையர் கூந்தல் நாறி - அங்குள்ள அந்நாட்டின் மகளிருடைய கூந்தல் போல மணங் கமழ்ந்து; தேன் எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றும் - வண்டுகள் எங்கும் மொய்க்கப்பட்டுச் செல்லும் ஒரு யாறு காணப்படும்.

   (வி - ம்.) 'அதனிடங் கடந்து' எனவே கேமசரியை மணப்பதூஉங் குறிப்பித்தானாயிற்று. பொங்குதல் - மிகுதல். போது போர்த்துப் பரந்து அந்நாட்டரிவையர் கூந்தல் போன்று நாறித் தேன் மொய்க்கப்பட்டு இழிவதோர் யாறென்க.

( 34 )
1200 மின்னுடைய மணிபல வரன்றி மேதகு
தன்னுடைய நலம்பகிர்ந் துலக மூட்டலிற்
பொன்னுடைக் கலையல்குற் கணிகைப் பூம்புனன்
மன்னுடை வேலினாய் வல்லை நீந்தினால

   (இ - ள்.) மன் உடை வேலினாய் - அரசர் கெடுதற்குக் காரணமாகிய வேலையுடையவனே!; மின்னுடை மணி பல வரன்றி - ஒளியினையுடைய மணிகள் பலவற்றையும் அரித்து; மேதகு தன்னுடை நலம் பகிர்ந்து - மேம்பட்ட தன்னுடைய நலத்தைப் பங்கிட்டு; உலகம் ஊட்டலின் - உலகினை உண்பித்தலின்; பொன்னுடைக் கலை அல்குல் கணிகைப் பூம்புனல் - பொன்னாலான மேகலை யணிந்த அல்குலையுடைய கணிகை போன்ற பூம்புனலை; வல்லை நீந்தினால் - விரைய நீந்திச் சென்றால்.

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

   நலம் - இன்பம். கணிகைப்பூம்புனல் - கணிகைத் தன்மையையுடைய அழகிய நீர். மன் - மன்னர். வல்லை - விரைவில்.

( 35 )
1201 யானைவெண் மருப்பினா லியற்றி யாவது
மானமாக் கவரிவெண் மயிரின் வேய்ந்தன
தேனெயூன் கிழங்குகாய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பைசூழ் காடு தோன்றுமே